

கோதுமை அப்பம்
தேவை:
கோதுமை மாவு - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
ரவை 1 டேபிள்ஸ்பூன்
மைதா - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
ஏலப்பொடி - டீஸ்பூன்
எண்ணெய் -பொரிப்பதற்கு
செய்முறை:
முதலில் கோதுமை மாவை நன்றாக சலித்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர்விட்டு வெல்லத்தை அதில் கரைத்துக்கொள்ளவும். பிறகு அதில் கோதுமை மாவு, ரவை, மைதா, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்து தேவைப்பட்டால் இன்னும் சிறிது நீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு கரண்டியால் மாவை எடுத்து விட்டு, இருபுறமும் பொன்னிறமாக பொரிக்கவும். சுவையான கோதுமை அப்பம் ரெடி.
வாழைப்பழ அப்பம்
தேவை:
கோதுமை மாவு - அரை கப்
அரிசி மாவு - 2 கப்
நன்கு கனிந்த பூவன்பழம் - 2
வெல்லம் - 2 கப்
தேங்காய் பல் (சிறு துண்டுகளாக) - 2 டீஸ்பூன்
ஏலக்காய்தூள் -1 டீஸ்பூன்
நெய் - அரை கப்
எண்ணெய் - தேவைக்கேற்ப
ஆப்ப சோடா - 2 சிட்டிகை
செய்முறை:
கோதுமை மாவு மற்றும் அரிசி மாவினை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். பூவன்பழத்தைத் துண்டுகளாக்கி, மிக்ஸியில் அடித்து மாவுடன் சேருங்கள். தேங்காய் துண்டுகளை 1 டேபிள் ஸ்பூன் நெய்யில் சிவக்க வறுத்து சேருங்கள்.
வெல்லத்தை அரை கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கரைந்து கொதித்ததும் வடிகட்டி சூடாக மாவில் ஊற்றுங்கள்.
அத்துடன் ஏலக்காய்தூள், ஆப்ப சோடா சேர்த்து, இட்லி மாவு பதத்தில் நன்கு கரையுங்கள்.
பின்னர் குழிப் பணியாரக் கல்லில் நெய், எண்ணெய் கலந்து ஊற்றி மாவு சிறிது ஊற்றி சிறு தீயில் நன்கு வேகவிடுங்கள்.
மறு புறம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து, சூடாகப் பரிமாறுங்கள். கலக்கல் சுவையில் வாழைப்பழ அப்பம் ரெடி.
ஜவ்வரிசி கார அப்பம்
தேவை:
இட்லி மாவு(புளிக்காதது) - 2 கப்,
ஜவ்வரிசி - கால் கப்,
சீரகம் - ஒரு ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 3,
இஞ்சி - சிறு துண்டு,
கறிவேப்பிலை - ஒரு கொத்து,
உப்பு - முக்கால் ஸ்பூன்,
கடுகு - ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
செய்முறை:
வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
அரைத்த இட்லி மாவுடன் உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும். அந்த மாவில் ஜவ்வரிசியை போட்டு 5 மணி நேரம் ஊற வைக்கவும். ஜவ்வரிசி கலந்து ஊறவைத்த மாவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்து அதை மாவில் கொட்டி கிளறிக்கொள்ளவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை ஊற்றி ஊத்தப்பம் போல் தடிமனாக தேய்த்து விடவும்.மேலே அரை ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு மூடிவிடவும். 2 நிமிடம் கழித்து அப்பம் வெந்து பொன்னிறமாக ஆனதும் எடுத்துவிடவும்.
இதனுடன் தேங்காய் சட்னி, சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
ரவை அப்பம்
தேவை:
மைதா மாவு - 1 கப்
ரவை -1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய் பொடி - சிறிது
பேக்கிங் சோடா - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும். பின் அதனுடன் ரவை மற்றும் கப் சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் தண்ணீரை சிறிது சிறிதாக கலந்துகொள்ளவும்.
ஒரு சிட்டிகை உப்பு, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி,1/4 ஸ்பூன் பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும்.
கட்டி இல்லாமல் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். மாவு கெட்டியாக இல்லாமல் மிதமாக இருக்கவேண்டும். அதன் பின் மூடி வைத்து 10 நிமிடங்கள் வைக்கவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு மாவு ஓரளவு கெட்டியாக இருப்பதை காணலாம்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் ஒரு குழிக்கரண்டி மாவை ஊற்றிக்கொள்ளவும். நன்றாக சிவந்த பின்னர் மறுபக்கம் திருப்பி போடவும். பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும். சுவையான ரவை அப்பம் ரெடி.