
வெயில் காலத்தில் பச்சை காய்கறிகள், பச்சடி, சாலட், ஜூஸ் போன்ற வகைகளை அதிகமாக விரும்பி எடுத்துக்கொள்வோம். சாதம் என்றால் தயிர் சாதம் தப்பாமல் தவறாமல் இடம்பெற வேண்டும். ஆதலால் பால், தயிர், மோர்தான் சம்மருக்கு மிகவும் அதிகம் உபயோகப்படுத்தும் பொருளாக இருக்கிறது. அதனால் இவைகளை வைத்து தினசரி உபயோகப்படுத்தும் பீட்ரூட் கேரட் உருளைக்கிழங்கு சேர்த்து ஒரு சுவையான சாலட்டை செய்யலாம்.
முக்கிழங்கு சாலட்
செய்ய தேவையான பொருட்கள்:
கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு தலா-ஒன்று
பொடியாக நறுக்கிய வெள்ளரி துண்டுகள்- ஒரு டேபிள் ஸ்பூன்
புளிக்காத கெட்டியான தயிர்- ஒரு கப்
ஃப்ரெஷ் கிரீம்- அரை கப்
பிரிட்ஜில் வைத்த குளிர்ந்த பால்- அரை கப்
சாட் மசாலா பொடி -2 டீஸ்பூன்
நெய்யில் வறுத்து பொடித்த மிளகு, சீரகப்பொடி- அரை டீஸ்பூன்
புதினா -கைப்பிடி அளவு
நறுக்கிய மல்லித்தழை -கைப்பிடி அளவு
எண்ணெயில் வதக்கி நீளமாக அறிந்த வெங்காயம்- ஒன்று
மணி காராபூந்தி- ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு -ருசிக்கு ஏற்ப
செய்முறை:
கேரட், பீட்ரூட் இரண்டையும் தோல் சீவி இரண்டாக வெட்டவும். உருளைக்கிழங்கை நன்றாக கழுவி தோலுடன் இரண்டாக வெட்டி குக்கரில் சாதம் வைக்கும் செப்பரேட்டரின் மேல் உள்ள தட்டில் தண்ணீர் சேர்க்காமல் நீராவியில் வேகும்படி வைத்தால் மூன்றும் வெந்துவிடும்.
வெந்த மூன்று கிழங்குகளையும் வெளியில் எடுத்து உருளைக்கிழங்கு தோலை உரித்துவிட்டு மூன்று கிழங்கையும் ஒரே அளவாக, அழகாக வெட்டி அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் வைத்துவிடவும்.
ஃப்ரெஷ க்ரீமில் குளிர்ந்த பாலை சேர்த்து, அதனுடன் மிளகு, சீரகப் பொடி, சாட் மசாலா, உப்பு சேர்த்து கலந்து தயிருடன் சேர்த்து இதை நறுக்கி வைத்திருக்கும் கிழங்கு பாத்திரத்தில் ஊற்றி கலக்கவும். அதன் மேலே புதினா, தனியா, வெள்ளரி துண்டுகள், மணிகாரா பூந்தியையும் தெளித்து தூவி அழகான கப்களில் எடுத்து சாப்பிடவும். தயிருடன் சாட் மசாலா கலந்து சாப்பிடும்போது சாலட் அசத்தலாக இருக்கும். மேலே மணி காராபூந்தி சேர்த்திருப்பதால் சாப்பிடுவதற்கு குழந்தைகள் போட்டி போடுவார்கள் .
இதுபோன்ற சாலட் வகைகள் செய்யும்பொழுது மிளகு, சீரக பொடி, சாட் மசாலா, உப்பு போன்றவற்றை டேபிளின் மீது வைத்துவிடுவது நல்லது. ஒரு லெமனை நான்காக கட் பண்ணி வைத்துவிட்டாலும் விருப்பப்பட்டவர்கள் சாலட்டின் மீது பிழிந்து சாப்பிடுவார்கள்.
மணிகார பூந்தியை பிழிந்து ஒரு டப்பாவில் போட்டு வையுங்கள். இதுபோன்ற சாலட் வகைகளில் தூவி சாப்பிட ருசியாக இருக்கும்.
சோலே கச்சோரி:
செய்யத் தேவையான பொருட்கள்:
மேல் மாவு தயாரிக்க:
ஒரு கப் மைதா, ஒரு கப் கோதுமை மாவு, கைப்பிடி கடலை மாவு மூன்றையும் உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து கெட்டியாக பிசைந்து வைத்துவிடவும்.
பூரணம் செய்வதற்கு:
ஊறவைத்து, ஒரு விசில் வேகவைத்து பொடித்த சோலே- ஒரு கப்
இஞ்சி பொடியாக நறுக்கி நசுக்கியது -ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா -ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன்
தனியா தூள், விதை தலா -ஒரு டீஸ்பூன்
ஆம்ச்சூர் பவுடர் -அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தனியா விதையை தாளிக்கவும். அது பொன்னிறத்திற்கும் மேலே லேசாக கருகலாக வரும் பொழுது பொடித்த சோலே, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, ஆம்ச்சூர் பவுடர் அனைத்தையும் சேர்த்து எண்ணெயில் நன்றாக புரட்டி எடுக்கவும். இப்பொழுது பூரணம் ரெடி.
ஒரு கடாயில் எண்ணெய் வைத்து அது கொதியும்பொழுது கச்சோரிக்கு பிசைந்து வைத்த மாவைத் திரட்டி, அதில் ஒரு உருண்டை பூரணத்தை வைத்து மூடி கச்சோரியை நன்றாக மூடி தேய்த்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு இருபுறமும் நன்றாக வேகும்படி பொரித்து எடுக்கவும். சோலே கச்சோரி ரெடி.