
முருங்கைக்காய் அதிக சத்து நிறைந்த காயாகும். முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன.
முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன.
முருங்கைக்காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கைக்காய் உடலுக்கு நல்ல வலுவைக்கொடுக்கும். இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.
வாரத்தில் குறைந்தது இரண்டுமுறை முருங்கைக்காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.
பொதுவாக முருங்கைக்காயில் சாம்பார் செய்வோம். கொஞ்சம் வித்தியாசமாக அதே சமயம் சுவையாக முருங்கைக்காயில் டால் மற்றும் ஒரு சப்ஜி ரெசிபியையும் பார்க்கலாம் வாங்க.
முருங்கைக்காய் டால் ரெசிபி:
முதலில் தேவையான துவரம் பருப்பை கழுவி குக்கரில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நான்கைந்து விசில் விட்டு வேகவைக்கவும். ஆறின பிறகு பருப்பை கடைந்து வைக்கவும்.
இப்போது இரண்டு முருங்கைக்காயை நறுக்கி கொள்ளவும். சாம்பாருக்கு நறுக்குவதைவிட இன்னும் சிறிது துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை குக்கரில் பருப்போடு சேர்த்து போடவும். தேவையான உப்பை போட்டு இன்னும் சிறிது தண்ணீர் கலந்து மறுபடியும் ஒரு விசில் விட்டு வைக வைத்து பிறகு அடுப்பை அணைக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு கடுகு, சீரகம், நறுக்கிய இஞ்சி துண்டுகள், மூன்று பச்சைமிளகாய், இரண்டு காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் போட்டு வதக்கவும். சிறிது வதங்கிய பிறகு ஒரு தக்காளியையும் பொடியாக நறுக்கிபோடவும். ஏற்கனவே பருப்பில் உப்பு சேர்த்திருப்பதால் இப்போது தக்காளி மற்றும் வெங்காயத்திற்கு மட்டும் தேவையான உப்பை சேர்த்து தக்காளி நன்றாக வதங்கும் வரை வதக்கவும். பிறகு பருப்பு மற்றும் முருங்கைக்காய் சேரந்த கலவையை ஊற்றி கலந்து கொதிக்கவைக்கவும். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். சிறிது கொதித்த பிறகு அடுப்பை அணைக்கவும். சூடான சுவையான முருங்கைக்காய் டால் ரெடி.
சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். சப்பாத்தி, இட்லி தோசைக்கும் தொட்டு கொள்ளலாம்.
அடுத்தபடியாக முருங்கைக்காய் சப்ஜி ரெசிபியை பார்க்கலாம்:
முருங்கைக்காய் சப்ஜி ரெசிபி:
இந்த சப்ஜி செய்வதற்கு இளசான அல்லது லேசாக முற்றின முருங்கைக்காய்தான் நன்றாக இருக்கும்.
முதலில் 250g முருங்கைக்காயை அவியலுக்கு போடும் ஸைஸில் நீளமாக வெட்டி கொள்ளவும்.
250g காயிற்கு ஒரு கைப்பிடி அளவு கடுகை தண்ணீரில் இருபது நிமிடத்திற்கு ஊற வைத்து அத்துடன் மூன்று பச்சைமிளகாய் மற்றும் ஆறு அல்லது ஏழு பல் பூண்டை சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து வைத்துகொள்ளவும்.
இரண்டு உருளைக் கிழங்கை தோல் சீவி cube ஷேப்பில் வெட்டிக்கொள்ளவும்.
அடுப்பை மூட்டி குக்கரில் மூன்று ஸ்பூன் எண்ணெயை ஊற்றி காய்ந்த பிறகு கடுகு, சீரகம் மற்றும் சோம்பை போட்டு தாளிக்கவும்.
இப்போது நறுக்கிய முருங்கைக்காயையும் உருளைக்கிழங்கையும் குக்கரில் போடவும்.
மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பை சேர்த்து நன்றாக கிளறவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடாமல் மூன்று நிமிடத்திறகு வேகவைக்கவும்.
இப்போது அரைத்து வைத்துள்ள மசாலாவை கலந்து இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் வந்த பிறகு அடுப்பை அணைக்கவும். சூடான சுவையான ஆரோக்கியமான முருங்கைக்காய் சப்ஜி ரெடி. சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். செய்து சுவைத்து பாருங்கள்.