
மகிழம்பூ புட்டு:
பயத்தம் பருப்பு 1 கப்
வெல்லம் 1 கப்
ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன்
முந்திரி பருப்பு 10
பாதாம் பருப்பு 10
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய் தேவையான அளவு
பயத்தம் பருப்பை ஒருமணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் விழுதாக இல்லாமல் சிறிது கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அதனை இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுத்து சிறிது ஆற விடவும். ஆறியதும் கையால் நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
நெய்யில் தேங்காய்த் துருவல், பாதாம், முந்திரித் துண்டுகளை வறுத்தெடுத்து வைக்கவும். வெல்லத்தைப் பொடித்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அடுப்பில் வைத்து இரண்டு நிமிடம் நன்கு கொதிக்கவிடவும். பாகு வைக்க வேண்டாம். கொதிக்கும் வெல்லத் தண்ணீரில் உதிர்த்த பயத்தம் பருப்பை சேர்த்து கைவிடாமல் நன்கு கிளறவும். நன்கு கெட்டியாகி சுருண்டு வரும்போது வறுத்த தேங்காய்த் துருவல், முந்திரி, பாதாம் பருப்புகளை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் புட்டு உதிர் உதிராக பட்டு போல் இருக்கும். சுவையான புரதம் நிறைந்த மகிழம்பூ புட்டு தயார்.
பனங்கிழங்கு காரப்புட்டு:
பனங்கிழங்கு நறுக்கியது 1 கப் மிளகாய் 3
சீரகம் 1 ஸ்பூன்
பூண்டு 4 பற்கள்
உப்பு தேவையானது
பனங்கிழங்கை நார் நீக்கி சின்னத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெறும் வாணலியில் மிளகாய் வற்றல், சீரகம், பூண்டு ஆகியவற்றை நன்கு வறுத்து சிறிது ஆறியதும் மிக்சியில் நறுக்கிய பனங்கிழங்கு துண்டுகளுடன் உப்பு சேர்த்து அரைக்கவும். கிழங்கு கொஞ்சம் காய்ந்ததாக இருந்தால் புட்டு உதிர் உதிராக நன்றாக வரும்.
பூண்டுக் குழம்புடன் சேர்த்து சாப்பிட அசத்தலான ருசியில் இருக்கும் இந்த பனங்கிழங்கு காரப்புட்டு.
அவல் புட்டு:
அவல் 2 கப்
தேங்காய்த் துருவல் 1/2 கப்
சர்க்கரை 1/2 கப்
ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன்
பாதாம், முந்திரி, திராட்சை அலங்கரிக்க
அவல் புட்டு செய்ய அடுப்பே தேவையில்லை. முதலில் அவலை சுத்தம் செய்து வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும். அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு ஊறவிடவும். நன்கு ஊறியதும் ஒரு பாத்திரத்தில் பிழிந்து போட்டு, விருப்பப்பட்டால் பால் சிறிது சேர்த்து, தேங்காய்த் துருவல், ஏலக்காய் தூள், வறுத்து பொடித்த பாதாம், முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துவிடவும். கடைசியாக சர்க்கரையும் சேர்த்து கலந்து விட எளிமையான அதே சமயம் மிகவும் ருசியான அவல் புட்டு தயார்.