ஆரோக்கியமான வடிகஞ்சி சுவை சூப் - மெமரி மூலிகை சூப்!

Memory Herb Soup!
Healthy soups
Published on

வடிகஞ்சி சுவை சூப்!

தேவையான பொருட்கள்:

சாதம் வடித்த கஞ்சி _2 கப்

நன்கு கடைந்த மோர் _1 கப்

வெள்ளரிக்காய் _1

தண்டுகீரை வேகவைத்த துண்டுகள் _ ¼ கப்

இஞ்சி _1 துண்டு

பச்சை மிளகாய் _2

உப்பு _தேவைக்கு

கருவேப்பிலை, மல்லிக் கீரை, மிளகுத்தூள் சிறிதளவு

செய்முறை: முதலில் கீரை தண்டுகளை வேகவைக்கவும். அந்த தண்ணீரை வீணாக்காமல் சூப்பில் சேர்க்கலாம். வெள்ளரிக் காயை தோல் சீவி துண்டுகளாக்கி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வடித்த கஞ்சி, மோருடன் உப்பு சேர்த்து கலக்கவும். கீரைத் தண்டு வேக வைத்ததை சேர்க்கவும். கருவேப்பிலை, மல்லி இலை பொடியாக நறுக்கி போடவும். கடைசியில் மிளகுத்தூள் சேர்த்து பரிமாறலாம். கோடையில் ஃப்ரிட்ஜில் வைத்தும் பரிமாறலாம்.

குறிப்பு; கஞ்சி இல்லை என்றால் சாதம் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து மிக்ஸி ஜாரில் அரைத்து தண்ணீர்விட்டு சேர்க்கலாம்.

மெமரி மூலிகை சூப்

தேவையான பொருட்கள்: வல்லாரை அல்லது அகத்திக் கீரை சுத்தம் செய்தது _1 கப்,

கரிசலாங்கண்ணி அல்லது அரைக்கீரை _1 கப்

புளிச்சக்கீரை _ 1 கப்

பழுத்த தக்காளி வடிகட்டிய சாறு _ 1 கப்

கண்டத்திப்பிலி, அரிசித் திப்பிலி, சுக்கு, ஏலம், லவங்கப்பட்டை, பூண்டு, மிளகு, சீரகம் _ சிறிதளவு

மிளகாய் தூள் _ 1/2 ஸ்பூன், உப்பு _ சிறிதளவு,

சர்க்கரை _4 ஸ்பூன்

ஆரஞ்சு சாறு அல்லது அன்னாசிப் பழச்சாறு_1கப்

பொடியாக நறுக்கிய மல்லித்தழை _ சிறிதளவு

செய்முறை: கண்டத்திப்பிலி, அரிசி திப்பிலி, சுக்கு, ஏலம், லவங்கப்பட்டை, பூண்டு, மிளகு, சீரகம், இவற்றை வாணலியில் ஒன்றாகப் போட்டு சூடு ஏறும் வரை வறுத்து வாசனை வந்ததும் இறக்கி மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும்.

மெல்லிய வெள்ளைத் துணியில் சுத்தம் செய்த வல்லாரை கீரை, கரிசலாங்கண்ணி, புளிச்சக் கீரையை கொட்டி, அதன் மேலே பொடித்த மூலிகை சாமான்களை போட்டுத் துணியை நன்கு முடிச்சு போடவும். வாய் அகலமான பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, கட்டி வைத்த மூலிகை முடிச்சைப் போட்டு நன்கு கொதித்ததும் மத்தால் லேசாக மூலிகை மூட்டையை இடிப்பது போல் செய்யவும்.

இதையும் படியுங்கள்:
சாமை பெசரட்டும், பணி வரகு உப்புமாவும்!
Memory Herb Soup!

இதனால் மூலிகை சாறு தண்ணீரில் கெட்டியாக இறங்கும். பிறகு மூட்டையை அழுத்தி கரண்டியால் வெளியே எடுத்து விடவும். இப்போது வெறும் மூலிகை சாறு மட்டும் பாத்திரத்தில் கொதிக்கும். அதில் தக்காளிச்சாறு, உப்பு, சர்க்கரை, மிளகாய்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் கொதித்ததும் கீழே இறக்கி, அன்னாசிப்பழ சாறு ஊற்றி மல்லியிலை தூவினால் சூப்பர் ருசியில் மெமரி மூலிகை சூப் கமகம மணத்துடன் தயார்.

வல்லாரை போன்ற மூலிகை கீரையுடன் மூலிகை பொருட்களும் சேர்வதால் சூப்பின் சுவையில் கசப்பு, புளிப்பு, உப்பு, காரம், சர்க்கரை, துவர்ப்பு ருசியில் இதுவரை குடித்திருக்க முடியாத அருமையான சுவையில் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com