
சிறுதானிய வகைகள் அனைத்தும் நார்ச்சத்து நிரம்பியது. எளிமையாக சமைக்கக் கூடியது. செரிமானத்திற்கு ஏற்றது. அரிசியில் செய்யும் அத்தனை பதார்த்தங் களையும் இந்த சிறு தானியங்களிலும் செய்து அசத்தலாம். சாப்பிடுவதற்கும் வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொன்றும் ஒரு ருசி. அதிலிருந்து செய்யக்கூடிய இரண்டு ரெசிபிகளை இதில் காண்போம்.
சாமை பெசரட் செய்ய தேவையான பொருட்கள்:
பாசிப்பயிறு முளைகட்டியது- ஒரு கப்
சாமை -அரை கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி- ஒரு டீஸ்பூன்
மிளகு ,சீரகம் தலா -ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 10
உப்பு, எண்ணைய்- தேவைக்கு ஏற்றவாறு
செய்முறை:
ஊறவைத்த சாமை அரிசி, பாசிப்பயிறு, இஞ்சி, மிளகு, சீரகம் அனைத்தையும் தோசைமாவுப்பதத்திற்கு நன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். அடுப்பில் தோசை தவாவை சூடாக்கி, கலந்து வைத்துள்ள மாவை தோசை கல்லில் ஊற்றி பரப்பி வேகவிடவும். அதன் மீது பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சிறிதளவு தூவி இருபுறமும் நன்றாக வேகவிட்டு எடுத்து வைக்கவும்.
வர மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி, உப்பு இவற்றினை நன்றாக அரைத்து, எண்ணெயில், கடுகு தாளித்து இந்தக் கலவையைக் கொட்டி நன்றாகக் கிளறி கொதிக்கவிட்டு இறக்கினால், அருமையான சட்னி ரெடி. அதனுடன் இந்த சாமை பெசரட்டை சேர்த்து சாப்பிட ருசி அள்ளும்.
பணிவரகு உப்புமா
செய்ய தேவையான பொருட்கள்:
பணிவரகு அரிசி வறுத்து லேசாக உடைத்தது -1கப்
சின்ன வெங்காயம் பொடியாக அரிந்தது -10
பச்சை மிளகாய், வர மிளகாய் தலா- 1
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை தலா- 2 டீஸ்பூன்
கடுகு- ஒரு டீஸ்பூன்
கடலை எண்ணெய்- இரண்டு டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை -ஒரு ஆர்க்கு
உப்பு- தேவையான அளவு
பொடித்த வெல்லம்- 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, அனைத்தையும் வறுத்து, சின்ன வெங்காயம், மிளகாய் வகைகள், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் மூன்று கப் தண்ணீர்விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் வறுத்து உடைத்து வைத்திருக்கும் பணி வரகு அரிசியை சேர்க்கவும். மறுபடியும் நன்றாக கொதித்ததும் அடுப்பை சிறு தீயில் வைத்து அரிசியை நன்றாக வேகவிட்டு, வெல்லத் துருவலை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கி வைக்க பணிவரகு அரிசி உப்புமாரெடி. சிறிது வெல்லச் சுவையுடன் சாப்பிடுவதற்கு படு டேஸ்டாக இருக்கும். தேங்காய் சட்னி நல்ல ருசி தரும்.