

சேலம் என்ற பெயரை கேட்டாலே அனைவரின் மனதில் முதலில் நினைவுக்கு வருவது எங்கள் ஊர் மாம்பழமே. அதேபோல் மாலை நேரத்தில் அருமையான திண்பண்டத்துக்குப் பெயர் போனதும் இந்த "தட்டுவடை செட்" தான்.
சில ஊர்களில், சில பண்டங்கள் மிகவும் பிரபலமாகவே இருக்கும். அது அந்த ஊர் மக்களின் ரசனையையும், அந்தந்த ஊர் பழக்க வழக்கங்களையும் சார்ந்து உருவாகி வருகிறது எனலாம். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தின்பண்டம் தான் தட்டுவடை செட். மாலை நேரம் நடைபாதை ஓரம் தள்ளு வண்டிகளிலும், மொபட்களிலும், சின்னச்சின்ன கடைகளிலும் இது கிடைக்கும்.
நம் மனதையும், கண்களையும் கவரும் ஒரு உணவு இது. சுமார் நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் இந்த வியாபாரம் இரவு பத்து மணி வரைக்கும் செல்லும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சுண்டி இழுக்கும் சுவை இதற்கு உண்டு. ஐந்து அல்லது ஆறு செட்டின் விலை ரூபாய் பத்துதான்.
நாம் பொதுவாக செய்யும் தட்டையின் அளவு இல்லாமல், சுமார் பழைய ஒரு ரூபாய் நாணயத்தின் அளவில்தான் சிறியதாக இருக்கும். இதற்கு பயன்படுத்தும் தட்டை. இரண்டு தட்டைகளை எடுத்துக் கொண்டு ஒன்றில் நல்ல காரமான சட்னியும், மற்றொன்றில் வேறு ஒரு சட்னியையும் தடவி இரண்டுக்கும் நடுவே துருவிய காரட், பீட்ரூட் கலவையை வைத்து சாண்ட்விட்ச் போல அப்படியே சாப்பிட வேண்டும். தட்டையின் மொறு மொறுப்பும், சட்னியின் காரமும், கேரட், பீட்ரூட்டின் லேசான இனிப்பு சுவையும் கலந்து வரும் ருசிக்கு ஈடு ஏதும் இல்லை என்றே சொல்லலாம்.
நாம் எப்பொழுதும் செய்யும் அதேமுறையில் சிறிய தட்டைகளை செய்யலாம். இல்லாவிடில் அந்தக் கடைகளில் தட்டையை மட்டும் வாங்கி வந்து வீட்டிலேயே சான்விட்ச் தயாரித்துக் கொள்ளலாம். அதற்கான சில குறிப்புகளை பார்க்கலாம்.
எந்தப் பொருள்களைக் கொண்டு சட்னி செய்கிறோமோ அதைப் பொறுத்து எண்ணெய்யை கூட்டி, குறைத்துக் கொள்ளலாம். தக்காளிக்கு அதிக அளவில் இருக்கும்.
புதினாவுக்கு அவ்வளவு தேவைப்படாது. அதேபோல சட்னி சிறிது நீர்த்து இருந்தாலும் தட்டையின் மொறுமொறுப்பு குறைந்துவிடும்.
காய்கறி துருவலில் எலுமிச்சை பழச்சாறு சேர்ப்பதால் அதன் நிறம் மாறாது, நல்ல மணத்தோடும் இருக்கும். சட்னி வகைகளிலேயே சிறிது காரம் இருப்பதால், காரட், பீட்ரூட் கலவையில் காரம் சேர்க்கத் தேவையில்லை.
சுவையான தட்டுவடை செட் செய்ய தேவையான பொருட்கள்
தட்டை-12
துருவிய காரட், பீட்ரூட் துருவல் கலவை -1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1/2 கப்
சிறிது நறுக்கிய கொத்தமல்லித்தழை
எலுமிச்சை சாறு -1/2 டீஸ்பூன்
காரச்சட்னி -6 டீஸ்பூன்
புதினாசட்னி -6 டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் -2 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
தட்டுவடை செட் தயாரிக்கும் எளிய செய்முறை
ஒரு பாத்திரத்தில் காரட், பீட்ரூட் துருவல், உப்பு, எலுமிச்சை சாறு அனைத்தையும் சேர்த்து கலக்கவும். ஆறு தட்டைகளின் மீது காரச்சட்னி தடவி வைக்கவும். அதன் மீது சிறிது காய்கறி கலவையை வைக்கவும். பிறகு அதன் மீது வெட்டிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, சாட் மசாலாத்தூளை தூவவும்.
மீதி உள்ள ஆறு தட்டைகளின் மேல் புதினாசட்னி தடவி காய்கறி கலவையின் மேல் வைத்துப் பரிமாறலாம். காய்கறிகளை விரும்பி சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த தட்டுவடை செட்டை ருசித்து சாப்பிடுவார்கள் அதன் மணம், ருசிக்கு. இதன் ஸ்பெஷல் ருசிக்காகவே மாலையில் முக்கியமான வீதிகளில் கூட்டம் கூடும்.
கடைகளில் விற்கும் தின்பண்டங்களுக்கு மாற்றாக, அதிக புரதச்சத்துள்ள காய்கறிகள் சேர்த்த இந்தத் தட்டுவடை செட்டை தயாரிப்பதன் மூலம், உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமற்ற துரித உணவுகளை தவிர்த்து, வீட்டிலேயே தரமான உணவை ருசிக்கும் பழக்கத்தை பெறுவார்கள்.