
எத்தனை உணவுகள் செய்து தந்தாலும் குழந்தைகள் புதிது புதிதாக உணவு வகைகளை விரும்புவார்கள். அந்த வகையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அளவுக்கு ரெசிபிகளை இங்கு பார்க்கலாம்.
தயிர் சாட் பூரி
தேவையானவை:
கோதுமைமாவு - 1/2 கப்
மைதா மாவு தல 1/4 கப்
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 2
தயிர் - 1 கப்
ரவை - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா- 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள்- 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
சர்க்கரை - 1/2 ஸ்பூன் கொத்தமல்லித்தழை - தேவைக்கு எண்ணெய் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவு மைதா மாவுகளை சலித்து அவற்றுடன் ரவை உப்பு, சிறிது சர்க்கரை சேர்த்து நீர் விட்டு பிசைந்து சிறிது நேரம் ஊறவைத்து சிறு சிறு பூரிகளாக இட்டு சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசிக்கவும். கேரட்டைக் கழுவி துருவிக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து மசித்த உருளைக்கிழங்கு, கேரட் துருவல், மஞ்சள் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், சாட் மசாலா மற்றும் தேவையான உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது ஒரு தட்டில் பொரித்த பூரிகளை வைத்து அவற்றின் நடுவே சிறிய ஓட்டை போட்டு இந்த உருளைக்கலவையை வைத்து பூரியின் மேல் புளிக்காத கெட்டி தயிர் ஊற்றி பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தலை தூவி பரிமாறவும். இதன் மேலே பூந்தி அல்லது சேவ் தூவி தந்தால் குழந்தைகள் விரும்புவார்கள்.
கலர்புல் சாலட்
தேவை:
கேரட் - 2
முட்டைக்கோஸ் - 100 கிராம்
குடை மிளகாய் வண்ணங்களில் - 1/4 கப்( நறுக்கி)
லெட்யூஸ் இலை - இருந்தால்
வெள்ளரிக்காய் -1
பாசிப்பருப்பு - 2 ஸ்பூன்
எலுமிச்சை பழச்சாறு - தேவைக்கு கொத்தமல்லித்தழை- சிறிது
கடுகு - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்
தக்காளி -1
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
தக்காளி சாஸ் - 1 ஸ்பூன்
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் துருவிய கேரட் மெலிதாக நறுக்கிய முட்டைக்கோஸ், லெட்யூஸ் இலை, குடைமிளகாய்கள், சிறியதாக கட் செய்த வெள்ளரிக்காய் போட்டு பாதி வெந்து மலர்ந்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக்கிளறவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து பச்சைமிளகாய் விழுது சேர்த்து வதக்கி இறக்கி காய்கறி கலவையில் சேர்த்து தேவையான எலுமிச்சை சாறு, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
சப்பாத்தி புலாவ்
தேவை:
சப்பாத்தி- 5
வெங்காயம்- 1
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
தக்காளி- 1
கடுகு உளுத்தம் பருப்பு -தாளிக்க
கரம் மசாலாத்தூள் -1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள்- 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை- சிறிது
உப்பு – சிறிது
செய்முறை:
சப்பாத்தியை கத்தி வைத்து சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு உளுந்து தாளித்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கி நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்திகளை போட்டுக்கிளறி இறக்கும்போது நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். இதற்கு தக்காளி சாஸ் வைத்து தந்தால் பறக்கும். இதில் விரும்பும் காய்கறிகளையும் வதக்கி சேர்ப்பது அவரவர் சாய்ஸ்.