
சித்திரை, வைகாசி வந்துவிட்டாலே சமையலறை சாமான்களை வாங்கி சேமிக்க தொடங்குவோம். அதை பக்குவமாக வீணாகி விடாமல் ஸ்டோர் பண்ணுவது எப்படி என தெரிந்துகொண்டால் சாமான்கள் எதுவும் நிறம், மணம் மாறாமல் இருக்கும்.
புளியை மொத்தமாக வாங்கி கல், கோது, கொட்டை இல்லாமல் சுத்தம் செய்தல் வேண்டும். நல்ல வெயிலில் காயவிட்டு எடுத்து வைத்து அதை உருண்டைகளாக உப்பு தொட்டுக்கொண்டு உருட்டி வைக்கவும். இதை மண்பானையில் வைத்து மண்மூடி கொண்டு மூடலாம்.இவ்வாறு செய்ய புளி கறுக்காமல் அப்படியே இருக்கும்.
துவரம்பருப்பு, கடுகு, சீரகம், வெந்தயம் போன்றவற்றை வாங்கியதும் சுத்தம் செய்துவிட்டு சற்று விளக்கெண்ணெய் கையில் படுமாறு தேய்த்துக்கொண்டு நல்ல வெயிலில் வைத்து ஆறியதும் காற்று புகாத டப்பாவில் வைக்க வருடத்திற்கு அப்படியே இருக்கும்.
கொத்தமல்லி, மிளகாயை நல்ல நிறமாக பார்த்து வாங்க வேண்டும். மல்லியை கல், மண் நீக்கி சிறிது மிளகாய் சேர்த்து வெயிலில் காயவைத்து ஈரமில்லாமல் காய்ந்ததும் டப்பாவில் வைக்கவும்.
மிளகாயை காம்பு சற்று இருக்குமாறு விட்டு விட்டு பழுத்ததை நீக்கி விட்டு வெயிலில் காயவிடவும். நன்கு காய்ந்ததும் ஆறியதும் டப்பாவில் பத்திரப்படுத்தவும்
குழம்புத்தூள், கறி மசாலா பொடிகளை வெயிலில் தனித்தனியாக காயவைத்து நைசாக அரைத்து ஆறியதும் காற்று புகாத பாத்திரத்தில் வைக்கவும்.
சில இடங்களில் தேவையான பொருட்களை வறுத்து அரைத்து, பொடியுடன் விளக்கெண்ணெய் தடவி நன்றாக அழுத்தி வைத்து மூடி பத்திரப்படுத்துவதும் உண்டு.
எண்ணெய் வாங்கினால் மொத்தமாக வாங்கியதில் சிறிது வெல்லம் போட்டு வைக்க காரல் வராமல் இருக்கும்.
அரிசி வாங்கியதும் சுத்தப்படுத்திவிட்டு அதனுடன் வேப்பிலை அல்லது நொச்சி இலை காய்ந்ததை போட்டு பானையில் வைத்து எடுக்க நன்றாக இருக்கும்.
வற்றல் மாவு தயாரிக்கையிலேயே நன்றாக வேகவிட்டு பின் ஆறியதும் பிழிய உடையாமல், காய்ந்ததும் நன்றாக இருக்கும்.வற்றல் டப்பாவில் கொஞ்சம் மஞ்சள்தூள் அல்லது அரிசி துணியில் கட்டி போட்டு வைக்க வற்றல் நமத்து போகாமல் நன்றாக இருக்கும்.
மொத்தமாக சாமான்கள் வாங்கி சேமிக்கும்போது தேவைக்கு ஈரக்கை இல்லாமல் எடுத்து தனியே தேவைக்கு புழங்க சாமான்கள் வருடத்திற்கு கெடாமல் நன்றாக இருக்கும்.