புரதச்சத்து மிக்க முந்திரிகொத்து - அசத்தல் ரெசிபி!

High in protein recipes
High in protein recipes
Published on

முந்திரிகொத்து தென்மாவட்டங்களில் புகழ் பெற்று விளங்கும் ஒரு இனிப்பாகும். இதில் புரோட்டீன் முதலான பல சத்துக்கள் அடங்கியுள்ளதால் ஆரோக்கியத்திற்கும் மிகவும் துணை செய்கிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி முதலான பகுதிகளில் இந்த முந்திரிகொத்து கிடைக்கும். இனி முந்திரிகொத்தை வீட்டிலேயே சுலபமாக எப்படிச் செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவில் நாம் கற்றுக் கொள்ளலாம்.

முந்திரிகொத்து செய்யத் தேவையான பொருட்கள் :

பாசிப்பயறு – 1 கப்

ஏலக்காய் – 5 எண்ணிக்கை

சுக்குப்பொடி – 1 சிட்டிகை

வெல்லம் – ¾ கப்

துருவிய தேங்காய் – ¾ கப்

வெள்ளை எள்ளு – 1 டேபிள் ஸ்பூன்

பச்சரிசி மாவு – ½ கப்

மைதாமாவு – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள்பொடி – ஒரு சிட்டிகை

நெய் – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை :

ஒரு கடாயில் பாசிப்பயறைப் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும். அதை தனியே ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை விட்டு சற்று காய்ந்ததும் அதில் முக்கால் கப் துருவிய தேங்காய் மற்றும் வெள்ளை எள்ளைச் சேர்த்து நன்றாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மிக்சியில் வறுத்த பச்சைப் பயிறைச் சேர்த்து அதனுடன் ஏலக்காய் மற்றும் சுக்குப்பொடியினைச் சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு சிட்டிகை உப்பையும் வறுத்து வைத்துள்ள தேங்காய்த் துருவலை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
பச்சரிசி மாவில் சுவையான விதவிதமான மாலை உணவு வகைகள்!
High in protein recipes

ஒரு கடாயில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி வெல்லத்தைப் போட்டு பாகுபதத்திற்கு காய்ச்சி பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள பச்சைப்பயறு மாவு மற்றும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து அதை ஒரு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

பச்சரிசி மாவு, மைதாமாவு, மஞ்சள்பொடி, உப்பு சிறிதளவு ஆகியவற்றைப் போட்டு சிறிது சிறிதாகத் தண்ணீர் ஊற்றி நன்றாக சற்று தளர்வாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.

ஒரு அகலமான கடாயில் எண்ணெயை ஊற்றி நன்றாகக் காய்ந்ததும் மூன்று அல்லது நான்கு உருண்டைகளை ஒன்றாகச் சேர்த்து அதை அப்படியே மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு சிவக்க வறுத்து எடுக்க வேண்டும்.

சுவையான முந்திரிகொத்து தயார். இந்த சத்தான பலகாரம் தென்மாவட்டங்களில் தீபாவளி மற்றும் கிருஸ்துமஸ் முதலான விழா சமயங்களில் பெரிதும் தயாரிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com