
வட மாநிலங்களில் ஹோலி பண்டிகையின்போது ஸ்பெஷலாக தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்பு 'மாவா குஜியா'. இது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.
மாவா குஜியா (Mawa Gujiya) ரெசிபி
தேவையான பொருட்கள்:
1. மைதா 2 கப்
2.நெய் 4 டேபிள் ஸ்பூன்
3. மாவா (கோவா) 1 கப்
4. பொடித்த சர்க்கரை ½ கப்
5. நறுக்கிய உலர் கொட்டைகள் & பழங்கள் ¼ கப்
6. தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
7. ஏலக்காய் பவுடர் ½ டீஸ்பூன்
8. பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை:
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதா மாவையும் நெய்யையும் போட்டு நன்கு கலக்கவும். பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கோவாவைப் போட்டு சிறு தீயில் நன்கு கிளறவும். அதன் நிறம் சிறிது கோல்டன் கலராக மாற ஆரம்பித்ததும் தீயை அணைத்துவிடவும்.
சிறிது ஆறியவுடன் அதனுடன் பொடித்த சர்க்கரை, நறுக்கிய உலர் பழங்கள், தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் பிசைந்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி ஒவ்வொன்றையும் வட்ட வடிவமாக ரோலிங் பின் (bin) வைத்து உருட்டிக்கொள்ளவும். அதன் நடுவில் கலந்து வைத்த கலவை (பூரணம்) யிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து வைத்து அரை வடிவ நிலாபோல் மடித்து ஓரங்களை தண்ணீர் தொட்டு அழுத்தி சீல் வைத்தாற்போல் மூடிவிடவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் குஜியாக்களைப் போட்டு சிறு தீயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். பொரித்தெடுத்த குஜியாக்களை ஒரு பேப்பர் டவலில் பரத்தி ஆயில் இல்லாமல் உலர்த்தவும். குஜியாக்களுக்கு மெல்லிய இனிப்பு சுவை கூட்ட, வெதுவெதுப்பான சர்க்கரைப் பாகில் சிறிது நேரம் போட்டெடுத்துப் பரிமாறவும்.
சுவை மிக்க மாவா குஜியா உண்பதற்கு தயார்! இதில் கோவா சேர்க்கப்பட்டிருப்பதால் குஜியாக்களை இரண்டு நாட்களுக்குள் உண்டு முடித்துவிடவும்.