10 நிமிடத்தில் தட்டு காலி! மொறுமொறுப்பான ஹோட்டல் ஸ்டைல் க்ரிஸ்பி காலிஃபிளவர் மல்லிகை!

இன்று காலிஃபிளவரை வைத்து 10 நிமிடத்தில் ஹோட்டல் ஸ்டைலில் சூப்பரான மொறுமொறு ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க...
காலிஃபிளவர் மல்லிகை
Cauliflower MalligaiAI Image
Updated on

காலிஃபிளவரில் கலோரிகள் குறைவு; நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, மற்றும் கே. சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒரு கப் காலிபிளவரில் சுமார் 25 கலோரிகள் மட்டுமே உள்ளதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக உட்கொள்ளலாம். இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தைப் பேணுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.

இது உடலுக்குத் தேவையான வைட்டமின் சி. சத்தை அதிகளவில் வழங்கி, நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. காலிஃபிளவரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதயநோய் அபாயத்தைக் குறைக்கின்றன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிஃபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது.

காலிஃபிளவரில் கூட்டு, பிரை, பொரியல், சூப், சாலட் என பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். காலிஃபிளவர், கொத்தமல்லி சேர்த்து செய்யும் இந்த ரெசிபி மிகவும் சுவையாக இருக்கும்.

கிரிஸ்பி காலிஃபிளவர் மல்லிகை (Cauliflower Malligai) என்று அழைக்கப்படும் இந்த ரெசிபி பெரும்பாலான உணவகங்களில் பரிமாறப்படும் ஒரு அருமையான சுவையான மற்றும் மொறுமொறுப்பான சிற்றுண்டி ஆகும். காலிஃபிளவர் 65 போன்றே செய்யப்படும் இந்த ரெசிபியில் மிளகாய் தூளுக்கு பதிலாக கொத்தமல்லி சேர்த்து செய்யப்படுவதால் இதற்கு 'மல்லிகை' என்ற பெயர் வந்தது. இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே போதுமானது. வாங்க இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்:

காலிஃபிளவர் - 1

கொத்தமல்லி - 1 கைப்பிடி

ப.மிளகாய் - 6

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு - 1

அரிசி மாவு - ஒரு கைப்பிடி

சோள மாவு (Corn flour) - 2 கைப்பிடி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

செய்முறை:

கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து நீரில் போட்டு நன்றாக கழுவிக்கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.

பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.

மிக்சிஜாரில் சுத்தம் செய்த கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, ப. மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.

காலிஃபிளவர் மல்லிகை
காலிஃபிளவர் மல்லிகைAI Image

காலிஃபிளவரை மீடியம் சைசில் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும்போது அதில் சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும். அடுத்து அதில் சுத்த செய்த காலிஃபிளவரை போட்டு 25 சதவீத வேகவைத்து தண்ணீர் இல்லாமல் நன்றாக வடித்து வைக்கவும். காலிஃபிளவரை நன்றாக வேக வைக்கக்கூடாது.

அடுத்து காலிஃபிளவரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த கொத்தமல்லி விழுது சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுத்து அதில் சோள மாவு, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள காலிஃபிளவரை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

காலிஃபிளவரை எண்ணெயில் போடும் போது அதனுடன் சேர்த்து கறிவேப்பிலையை போடவேண்டும்.

அப்போது தான் நல்ல வாசனையுடன் சூப்பராக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான அரிசி கேசரியும், அசத்தலான காலிஃபிளவர் போண்டாவும்!
காலிஃபிளவர் மல்லிகை

இப்போது சூப்பரான கிரிஸ்பி காலிஃபிளவர் மல்லிகை ரெடி.

கிரிஸ்பி காலிஃபிளவர் மல்லிகை சூடாக இருக்கும் போதே அதன் மேல் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

மாலை நேரத்தில் சூடான டீயுடன் இந்த கிரிஸ்பியான காலிஃபிளவர் மல்லிகை சாப்பிட அட்டகாசமாக இருக்கும். காலிஃபிளவர் சாப்பிட பிடிக்காத குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் வேண்டாம்னு சொல்லவே மாட்டாங்க.

அதேபோல் உங்கள் வீட்டிற்கு திடீர்னு விருந்தாளிகள் வந்துவிட்டால் இந்த ரெசிபியை செய்து அசத்தலாம். ஏன்னா இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

இதையும் படியுங்கள்:
காலிஃபிளவர் இருந்தா போதும். சாயங்கால ஸ்நாக்ஸ் முதல் இரவு டின்னர் வரை அசத்தலாம்!
காலிஃபிளவர் மல்லிகை

இந்த ரெசிபியை ஒருமுறை உங்க வீட்டுல செஞ்சி பாருங்க...திரும்ப திரும்ப... உங்க வீட்ல இருக்கிறவங்க செஞ்சி தரச்சொல்லி கேப்பாங்க.

logo
Kalki Online
kalkionline.com