

புழுங்கல் அரிசி வெல்ல கேசரி
தேவை:
புழுங்கல் அரிசி, பொடித்த வெல்லம் – தலா ஒரு கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், பச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை,
முந்திரி – 8 , ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.
செய்முறை:
முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும். பின்னர் வாணலியில் புழுங்கல் அரிசியை நன்றாக வறுத்து மிக்ஸியில் ரவை பதத்தில் பொடித்துக் கொள்ளவும். வெல்லத்துடன் நீர் சேர்த்து சூடாக்கி, வடிகட்டவும். வடிகட்டிய வெல்லத்துடன் 3 கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு. நன்கு கொதித்ததும் மிக்ஸியில் அரைத்த அரிசி ரவையை சேர்த்துக்கிளறவும். அரிசி ரவை நன்கு வெந்ததும், நெய், ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி, பச்சை கற்பூரம் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான புழுங்கல் அரிசி வெல்ல கேசரி ரெடி.
காலிஃப்ளவர் போண்டா
தேவை:
பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர், வெங்காயம் - தலா ஒரு கப்
கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு - தலா 2 டீஸ்பூன்
மிளகாய் விழுது , இஞ்சி விழுது - தலா ஒரு டீஸ்பூன்
வாழைக்காய் – 1, உப்பு, எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
முதலில் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காலிஃப்ளவர், வெங்காயம், இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வாழைக்காயை வேகவைத்து, தோல் உரித்து, பொடியாக நறுக்கி வதக்கிய காலிஃப்ளவர், வெங்காயத்துடன் சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.
அரிசி மாவு, கடலை மாவு, சோள மாவு மூன்றையும் தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்
உருண்டைகளை கரைத்த மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான காலிஃப்ளவர் போண்டா தயார்.