
பரோட்டா வெஜ் குருமா :
மைதா கால் கிலோ
உப்பு சிறிது
சர்க்கரை 1 ஸ்பூன்
எண்ணெய் தேவையானது
ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, சக்கரை சேர்த்து கையால் நன்கு கலந்து விட்டுக்கொண்டு தேவையான தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும். இதன் மேல் எண்ணெய் தடவி தட்டைப் போட்டு மூடி ஒருமணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறிய மாவை சிறு உருண்டைகளாக உருட்டி ஈரத்துணியால் மூடி வைக்கவும். அரைமணி நேரம் கழித்து சப்பாத்தி கட்டையில் மெல்லியதாக தேய்த்து கத்தியால் நீள நீளமாக நூல் போல் வெட்டவும்.
அதன் மேல் எண்ணெய் தடவி சிறிது மைதாவையும் தூவி ஒன்றாக சேர்த்து சுருட்டி வைக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சுருட்டி வைத்துள்ள பரோட்டாவை கையால் லேசாக தட்டி தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும். ருசியான பரோட்டா தயார்.
மிக்ஸட் வெஜ் குருமா:
பீன்ஸ் 6
கேரட் 2
பச்சை பட்டாணி 1/2 கப்
உருளைக்கிழங்கு 1
குடைமிளகாய் பாதி
வெங்காயம் 1
தக்காளி 2
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
அரைத்து விட:
தேங்காய்த் துருவல் அரை கப், சோம்பு 1 ஸ்பூன், பச்சை மிளகாய் 4
தாளிக்க:
பட்டை சிறு துண்டு, கிராம்பு 2, ஏலக்காய் 1,
பிரிஞ்சி இலை 1
எல்லா காய்கறிகளையும் சின்னத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தேங்காய், சோம்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு பொரிக்கவும். முதலில் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின்பு மற்ற காய்கறிகளையும் போட்டு தேவையான தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் வேகவைத்து எடுக்கவும்.
ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள மசாலாவையும், இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து கொதிக்க விட்டு இறக்க மிகவும் ருசியான மிக்ஸட் வெஜ் குருமா தயார்.