தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று அரிசி பருப்பு சாதம். எளிமையான பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய இந்த உணவு, சுவையிலும் மணத்திலும் அனைவரையும் கவர்ந்திழுக்கும். ஹோட்டல்களில் பரிமாறப்படும் அரிசி பருப்பு சாதத்திற்கு தனிப்பட்ட சுவை இருக்கும். அதே சுவையை வீட்டிலும் எப்படி கொண்டு வருவது என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலைகள்
பச்சைமிளகாய் - 2
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அரிசி மற்றும் துவரம் பருப்பை தனியாக 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம் பெருஞ்சீரகம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர், வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி வெந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இப்போது, ஊறவைத்த அரிசியை துவரம் பருப்பு, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். குக்கரை மூடி, 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். அடுத்ததாக குக்கரில் உள்ள காற்றை வெளியேற்றி மூடியைத் திறந்து சாதத்தை மெதுவாகக் கிளறி விடவும்.
பின்னர் தேவையான அளவு சாம்பார் பொடி மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடுங்கள். இறுதியில் சிறிது நேரம் கழித்து பருப்பு சாதம் கெட்டியான பதத்திற்கு வந்ததும், கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் கமகமக்கும் அரிசி பருப்பு சாதம் தயார்.
இத்துடன் சுவையான பொரியல், ஊறுகாய், தயிர், சட்னி போன்றவற்றை வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.