
சமைக்கும் போது, நம் மனநிலை எப்படி இருக்கிறதோ, அதற்கு ஏற்ப சமையலின் சுவையும் மாறும் என்று சொன்னால், உங்களால் நம்ப முடியுமா? ஆனால் இது உண்மை. சமைக்கும் போது, நம் உணர்ச்சிகளின் நிலைக்கு ஏற்ப, சமையலின் சுவை முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது.
1. சமைக்கும் முன் மனநிலை முக்கியம்
சமைக்க போகும் முன், நம்முடைய மனநிலை எப்படி இருக்கிறதோ, அதைப் பொறுத்தே உணவின் சுவையும் மாறுகிறது. மனம் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தால், சமைக்கும் உணவு ருசியாக இருக்கும். எனவே, சமைப்பதற்குமுன் நாம் தயார் செய்ய வேண்டியது வேறு எதுவும் இல்லை; நம் மனநிலையைதான்!
2. முழு கவனத்துடன் சமையல் செய்வது
சமையல் செய்யும் நேரத்தில், உங்கள் முழு கவனமும் அந்தச் செயலில் மட்டும் இருக்க வேண்டும். நீங்கள் என்ன சமைக்க போகிறீர்கள் என்பதும் அதற்கு என்னென்ன தேவை என்பதும் குறித்து தெளிவு வேண்டும். ஒரு பொருளை சேர்க்கும் முன், அது அந்த உணவுக்கு பொருத்தமானதா என்பதை சிந்தித்து சேர்க்க வேண்டும்.
3. முடிவை பற்றிய கவலையை விலக்கு
சமையலைத் தொடங்கும் முன்பே “இது சாப்பிட முடியுமா?”, “யாராவது குறை சொல்லுவாங்களா?”, “நன்றாக வருமா?” என்ற எண்ணங்களை மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். அதற்கு பதிலாக, “நான் சமைப்பது ருசியுடன் இருக்கும்; அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்" என்ற நமிக்கையோடு செயல்படுங்கள். நிச்சயமாக நீங்கள்தான் சமையல் ராணி!
4. புதுமையை அணுகுங்கள்
உங்கள் மனதில் ஏதாவது புதிய யோசனை வந்தால், உதாரணமாக, “இந்தப் மசாலாவை சேர்த்துப் பார்ப்போமா?” என்று தோன்றினால், அதை தயங்காமல் செய்து பாருங்கள். அது ஒரு புதிய, ருசியான உணவாக மாறலாம். சில நேரங்களில் தவறுகள் நடக்கலாம். ஆனால் அந்த தவறுகள்தான் ஒரு அனுபவத்தை தரும்.
5. சமையலின் மூன்று முக்கிய அம்சங்கள்
சமையல் ஒரு கலை. அதை சிறப்பாகச் செய்வதற்கு மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன: மனஅமைதி, நல்ல சூழ்நிலை, மற்றும் தரமான பொருட்கள். இந்த மூன்றும் ஒன்றாக இணைந்தால், உங்கள் சமையல் சுவையாகவும், அனைவரும் பாராட்டும் படியாகவும் இருக்கும்.
6. சிறந்த சமையலுக்கு சுத்தமான சூழ்நிலை தேவை
நீங்கள் சமையல் செய்யும் இடம் சுத்தமாக இருந்தால், உங்கள் மனதில் அமைதி தோன்றும். இந்த அமைதி உங்கள் செயலில் தெரியும். அதனால் உணவு எப்படி அமைய வேண்டும் என்பதையும், உணவின் தரம் எப்படியிருக்கும் என்பதையும் இந்த சுத்தமான சூழ்நிலை தீர்மானிக்கிறது.
7. இசையும் சுவைக்கூட்டுமே
நீங்கள் விரும்பும் பாடலை கேட்டுக்கொண்டு மன மகிழ்ச்சியுடன் இருக்கும் நேரத்தில் நீங்கள் சமைக்கும் உணவு உங்கள் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாக இருக்கும். நீங்கள் சமைத்த அந்த உணவை சாப்பிடுபவர்களாலும், உங்களின் மனநிலையை உணர முடியும்.
8. சமையலின் வழியே நேச குரல்
சமையல் என்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு அமைதியான மொழி. சிலர் ஓவியம் மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள்; அதுபோல சிலர் சமையல் வழியாக தங்கள் உணர்வுகளை பகிர்வார்கள். சமையல் என்பது உணவை தயாரிப்பது மட்டும் அல்ல, சமைப்பவரின் மனநிலையையும் பாசத்தையும் காட்டும் உணர்வு. உணவை சமைப்பது மட்டுமல்ல, அதை அன்போடு பரிமாறும் அந்த தருணமும் மிகவும் அழகானது.
9. மன அழுத்தத்தை நீக்கும் சமையல்
மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற உணர்வுகள் பல நேரங்களில் நம்மை பாதிக்கின்றன. அப்போது சமையல் ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது. சமைக்கும்போது முழுமையாக கவனம் செலுத்த வேண்டியதால், நம்மை மற்ற சிந்தனைகளில் இருந்து தள்ளி வைத்து மனதை ஒருநிலைப்படுத்துகிறது. அன்புடன் சமைக்கப்படும் உணவு மன அழுத்தத்தைக் கூட மெதுவாக குறைக்கும்.