குழந்தைகளுக்கான ஈவினிங் ஸ்நாக்ஸ், அதுவும் 10 நிமிடங்களில். செய்வது எப்படி?

Snacks
Snacks

1. இட்லி தட்டில் மிகவும் மொறு மொறுப்பான பிஸ்கட்

Biscuit
BiscuitImage Credit: cooking and tips cafe

தேவையான பொருட்கள்:

 • வெண்ணெய் 100 கிராம்

 • பொடித்த சர்க்கரை 100 கிராம்

 • வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன்

 • கோதுமை மாவு ஒரு கப்

செய்முறை:

மைதா மாவை தவிர்த்து கோதுமை மாவை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த பிஸ்கட் செய்ய முதலில் வெண்ணெயுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து ஸ்பூனால் நன்கு கலந்து விட்டுக் கொள்ளவும். பிறகு வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன் சேர்த்து அதையும் நன்கு கலந்து கொள்ளவும். இப்பொழுது கோதுமை மாவை நன்கு சலித்து ஒரு கப் அளவில் எடுத்து வெண்ணெய் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும் .

சப்பாத்தி மாவை விட சற்று தளர்வாக பிசைந்து கொள்வது நல்லது. இதனால் பிஸ்கட் நன்கு மொறுமொறுப்பாக ருசியாக கிடைக்கும். இப்பொழுது பிசைந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி ஒரு ஃபோர்க்கால் நடுவில் சிறிது அழுத்தி பிரஸ் பண்ண அழகான ஷேப்பில் ரெடியாகிவிடும். இதனை இட்லி தட்டில் வைத்து வேக விடவும். ஓவன் தேவையில்லை.

இட்லி பாத்திரத்தில் ஒரு கப் கல் உப்பை அடியில் போட்டு உப்பு நன்கு சூடாகும் வரை அடுப்பை நன்கு எரிய விட்டு நன்கு சூடானதும் மிதமான தீயில் வைத்து மேலே இட்லி தட்டில் பிஸ்கட்களை பரப்பி மூடி விடவும். 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேகட்டும். இப்பொழுது திறந்து பார்க்க அருமையான பொன் கலரில், மணமான கோதுமை மாவு பிஸ்கட் தயார்.

இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். டீ டைமில் இதனை டீயுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். செய்வதும் எளிது. இரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம். கிரிஸ்பியாகவும் ருசியாகவும் இருக்கும். பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு ஏற்ற ருசியான ஸ்நாக்ஸ் இது.

2. ஸ்பைஸி ஸ்வீட் பொட்டேட்டோ சாட்

sweet potato chaat recipe
sweet potato chaat recipeImage Credit: nithyas kitchen

தேவையான பொருட்கள்:

 • சக்கரை வள்ளி கிழங்கு 1/4 கிலோ

 • சாட் மசாலாப் பொடி 1/2 ஸ்பூன்

 • சீரகப்பொடி 1/2 ஸ்பூன்

 • தனியா பொடி 1 ஸ்பூன்

 • உப்பு தேவையானது

 • எலுமிச்சம்பழம் 1 மூடி

 • ஓமப்பொடி சிறிது

மசாலா அரைக்க:

 • இஞ்சி ஒரு துண்டு

 • பச்சை மிளகாய்2

 • கொத்தமல்லி சிறிது

மூன்றையும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.

செய்முறை:

சர்க்கரை வள்ளி கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கி வாணலியில் எண்ணெய் வைத்து சூடானதும் பொரித்தெடுக்கவும். இதனை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு உப்பு, சாட் மசாலாப் பொடி, சீரகப்பொடி, தனியா பொடி, அரைத்து வைத்த மசாலா, கடைசியாக எலுமிச்சம்பழம் ஒரு மூடி பிழிந்து நன்கு கலக்கவும். மேலாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி ஓமப்பொடியும் தூவி கொடுக்க இந்த சாட் ரொம்ப அற்புதமான சுவையில் இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

3. பிரட் வெஜிடபிள் போண்டா

breed vegetable bonda
breed vegetable bondaImage Credit: sweetspicytasty

தேவையான பொருட்கள்:

 • ப்ரெட் ஸ்லைஸ் 4

 • வெங்காயம் ஒன்று

 • உருளைக்கிழங்கு ஒன்று

 • காரட் ஒன்று

 • கொத்தமல்லி சிறிது

 • உப்பு தேவையானது

 • காரப்பொடி ஒரு ஸ்பூன்

 • தனியா பொடி அரை ஸ்பூன் எண்ணெய் பொரிக்க

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நான்கு பிரட் துண்டுகளை எடுத்து சிறிது நீரில் முக்கி எடுத்து கையால் உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கேரட், உருளைக்கிழங்கை கேரட் துருவலில் துருவிக் கொண்டு தேவையான உப்பு, காரப்பொடி, தனியா பொடி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரட் கலவையை சின்ன சின்ன போண்டாக்களாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

மிகவும் ருசியான போண்டா ஐந்தே நிமிடத்தில் ரெடி.

4. கேழ்வரகு பிடி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

 • கேழ்வரகு மாவு 200 கிராம்

 • வேர்க்கடலை 100 கிராம்

 • வெல்லம் 100 கிராம்

 • ஏலக்காய் 2

 • உப்பு ஒரு சிட்டிகை

 • தேங்காய் பல் பல்லாக கீற்றியது 1/4 கப்

 • நெய் 2 ஸ்பூன்

செய்முறை:

2 கப் தண்ணீரை ஒரு சிட்டிகை உப்பு, நெய் ரெண்டு ஸ்பூன் விட்டு கொதிக்க வைத்து கேழ்வரகு மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.

வேர்க்கடலையை தோல் நீக்கி ஏலக்காய் சேர்த்து ஒன்றிரண்டாக பொடிக்கவும். வெல்லத்தை பொடி செய்து பல் பல்லாக கீற்றிய தேங்காயுடனும் வேர்க்கடலையுடனும் கலந்து விடவும்.

இப்பொழுது கேழ்வரகு மாவை நன்கு கையால் பிசைந்து எலுமிச்சம் பழ சைஸில் உருட்டி நடுவில் வேர்க்கடலை கலவையை வைத்து மூடி கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

மிகவும் சத்தான இந்த சிற்றுண்டியை மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதும் எளிது.

5. அரிசி பொரி

தேவையான பொருட்கள்:

 • பொரி அல்வா:

 • பொரி 2 கப்

 • வெல்லம் 3/4 கப்

 • ஏலக்காய் 4

 • முந்திரி பருப்பு 10

 • நெய் 1/4 கப்

 • ஃபுட் கலர் 1/2 ஸ்பூன்

செய்முறை:

பொரியை நீரில் 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு கையால் ஒட்ட பிழிந்து மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டு ஏலக்காயையும் பிரித்துப் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும். வெல்லத்தை பொடித்து அடுப்பில் கால் கப் தண்ணீர் விட்டு வெல்லம் நன்கு கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
ரமலான் ஸ்பெஷல் வட்லாப்பம் வீட்டிலேயே செய்யலாம் வாங்க!
Snacks

அடி கனமான உருளியில் அல்லது வாணலியில் வெல்லக்கரைசல், அரைத்த பொரி பேஸ்ட் சேர்த்து ஃபுட் கலர் அரை ஸ்பூன் கலந்து அடுப்பை நிதானமாக வைத்து கிளறவும். அவ்வப்போது சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறி சூருள வந்ததும் இறக்கி நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு துண்டுகளை கலந்து விட ருசியான பொரி அல்வா தயார்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இந்த ஸ்வீட்டை செய்ய இனி அடிக்கடி இதற்காகவே பொரியை வாங்குவீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com