
சமீபகாலமாக இணையத்தில் போலி பன்னீர் தயாரிக்கப்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சைவ பிரியர்கள் பெரும்பாலும் அதிகமாக பன்னீர் உட்கொள்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கால்சியம் சத்து இருக்குமென பன்னீரை உட்கொண்டு வருகிறார்கள். பன்னீர் என்பது திரிந்த பாலில் இருந்து கிடைக்கக்கூடிய ஒரு பொருளாகும். இது ஒரு பால் பொருள் என்பதால் குறைந்தது 10 நாட்களில் கெட்டுவிடும்.
மென்மையான இந்திய சீஸ் என்றும் அழைக்கப்படும் பன்னீர் பல்வேறு வகையான குழம்பு வகைகள், இனிப்பு போன்றவற்றிற்கு பயன்படுத்தப்பட்டு அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு உணவுப் பொருள். போலியான பன்னீர் என்பது விலை மலிவான அல்லது தரமற்ற காய்கறி எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது வழக்கமான பன்னீருக்கு ஒரு மாற்றாக அமைகிறது. வழக்கமான பன்னீர் என்பது பாலில் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து அதனை திரைய வைத்து அதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதுவே அனலாக் பன்னீர் என்பது முழுக்க முழுக்க எமல்சிஃபையர்கள், காய்கறி எண்ணெய் ஸ்டார்ச் கொண்டு செய்யப்படுகிறது.
பாலில் இருந்து தயாரிக்கப்படும் வழக்கமான பன்னீர் என்பது புரோட்டின், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் சிறந்த மூலமாக அமைகிறது. இதுவே அனலாக் பன்னீர் குறைந்த புரோட்டீன் அளவை கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இதில் பெரும்பாலும் டிரான்ஸ்ஃபேட் அல்லது சாச்சுரேட்டட் ஃபேட் போன்ற ஆரோக்கியமற்ற கொழுப்புகளால் நிறைந்துள்ளது. இந்தியாவில் அனலாக் பன்னீர் விற்பனை செய்வது சட்டத்திற்கு புறம்பான காரியம் அல்ல. எனினும் அதனை அனலாக் பன்னீர் அல்லது நான்-டைரி என்று லேபிளில் குறிப்பிடாமல் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அனலாக் பன்னீரில் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எதுவும் இருக்காது. இதனால் இது பல்வேறு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
போலி பன்னீர் கண்டுபிடிப்பது எப்படி?
இதை தெரிந்து கொள்வதற்கு அயோடின் கரைசலை பயன்படுத்தலாம். ஒரு சிறிய துண்டு பன்னீரை சிறிது சூடாக்கி, அதில் 2-3 சொட்டு அயோடின் கரைசலைச் சேர்க்கவும். பன்னீரில் ஸ்டார்ச் கலந்தால், அதன் நிறம் வெள்ளை நிறத்தில் இருந்து ஊதா அல்லது அடர் நீலமாக மாறும். பன்னீரில் ஸ்டார்ச் கலந்திருப்பதற்கான தெளிவான அறிகுறி இது, மேலும் அது போலியானது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
பன்னீரின் அடர்த்தியை பராமரிக்க அதன் இயற்கையான கொழுப்பை நீக்கி சேர்க்கப்படும் ஒரு பொருள் ஸ்டார்ச் ஆகும். இந்த சோதனை மிகவும் மலிவானது மற்றும் அணுகக்கூடியது, இதை யார் வேண்டுமானாலும் வீட்டிலேயே செய்யலாம்.