

வேர்க்கடலையுடன் முளைகட்டிய தானியங்கள் சேர்த்த சத்துக்கள் நிறைந்த அருமையான ஒரு புட்டு இது. இதிலுள்ள புரதசத்தும் இரும்புச்சத்தும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஏற்றது.
தேவையான பொருட்கள்:
வேர்கடலை - 400 கிராம், கேழ்வரகு - 100 கிராம், கம்பு - 100 கிராம், மக்காச்சோளம் - 100 கிராம், சோளம் - 100 கிராம், வெல்லம் - 100 கிராம், தேங்காய்த்துருவல் - ஒரு கப், நெய் 50- மில்லி, ஏலக்காய் – 8, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கேழ்வரகு, கம்பு, மக்காச்சோளம், சோளம் இந்த நான்கு தானியங்களையும் காலையில் தனித்தனியாக ஊறவைத்து, மாலையில் கழுவி சுத்தம் செய்து நீரில்லாமல் வடித்து தனித்தனியாக வெள்ளை துணியில் கட்டி வைத்து விட வேண்டும்.
மறுநாள் காலையில் எல்லா தானியங்களும் முளைவிட்டிருக்கும். அவற்றை தனித்தனியாக காயவைத்து நன்கு காய்ந்ததும் தனித்தனியாக வறுத்து அத்துடன் ஏலக்காயும் வறுத்து சேர்த்து மாவாக அரைத்துக்கொள்ளவும். வேர்க்கடலையை வாசம் வரும் வரை வறுத்து ஆறியவுடன் கைகளால் பிசைந்து தோல் நீக்கி சுத்தம் செய்து அதை மட்டும் கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
ஏற்கனவே அரைத்து வைத்த தானியமாவில் தேவையான உப்பு நீர் தெளித்து, பிசறி ஆவியில் வேகவைத்து எடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி நன்கு உதிர்த்து விட்டு அதில் தேங்காய்த் துருவலைப் போட்டு கரகரப்பாக பொடித்த நிலக்கடலை மற்றும் தேவையான வெல்லத்தை பொடித்து சேர்த்து அத்துடன் நெய் விட்டுக் கிளறி சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
அதிக புரத சத்து வெல்லம் சேர்ப்பதால் இரும்பு சத்தும் நிறைந்துள்ள இந்த வேர்க்கடலை தானியப் புட்டை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேரத்தில் செய்து சாப்பிட சத்துமிகு ரெசிபி இது.