

பன்னீர் சட்படா ரெசிபி
தேவையான பொருட்கள்:
சதுர வடிவில் நறுக்கிய பன்னீர் துண்டுகள் 200 கிராம்
நறுக்கிய பெரிய வெங்காயம் 1
நறுக்கிய குடை மிளகாய் 1
நறுக்கிய தக்காளி 1
நறுக்கிய பச்சை மிளகாய் 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் ½ டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
கரம் மசாலா தூள் ½ டீஸ்பூன்
சாட் மசாலா தூள் 1 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் 2 டேபிள் ஸ்பூன்
லெமன் ஜூஸ் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
ஃபிரஷ் கொத்தமல்லி இலைகள் 1 கைப்பிடி
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தைப் போடவும். சீரகம் சிவந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 15 செகண்ட்ஸ் வதக்கவும். பின் அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து 2-3 நிமிடம் கிளறவும். பின் தக்காளி சேர்த்து, அது மிருதுவாகும் வரை வேகவிடவும். அதனுடன் உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்துவிடவும். பிறகு தக்காளி கெட்சப் ஊற்றி, ஒரு கை அளவு தண்ணீர் தெளித்து சிறு தீயில் வைத்து கிளறவும்.
பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து, அவை உடைந்து விடாமல் மெதுவாகப் பிரட்டி விட்டு 2-3 நிமிடம் வைத்திருக்கவும். பின் சாட் மசாலா தூள் தூவி, லெமன் ஜூஸ் பிழிந்து குலுக்கி விடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி இலைகள் தூவி அலங்கரிக்கவும். சூடாக, சப்பாத்தி, நான், பரோட்டா போன்ற உணவுகளுக்கு சைடு டிஷ்ஷாக தொட்டுக்கொள்ள சூப்பரான சுவையாயிருக்கும்.
செட்டி நாடு வெங்காய கொத்ஸு ரெசிபி
தேவையான பொருட்கள்:
பொடிசா நறுக்கிய பெரிய வெங்காயம் 4
பொடிசா நறுக்கிய தக்காளி 2
பொடிசா நறுக்கிய உருளைக் கிழங்கு 1
மிளகாய் தூள் 2 டேபிள் ஸ்பூன்
பெருஞ் சீரகம் 1 டீஸ்பூன்
சீரகம் ½ டீஸ்பூன்
கச கசா ½ டீஸ்பூன்
உடைத்த கடலை (fried gram) 2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் 3 டேபிள் ஸ்பூன்
1பட்டை ஒரு சிறு துண்டு
1பிரிஞ்சி இலை 1
தேங்காய் எண்ணெய் 4-5 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
மிக்ஸியில் மிளகாய் தூள், பெருஞ் சீரகம், சீரகம், கச கசா, உடைத்த கடலை, துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து மசிய அரைத்தெடுக்கவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை மற்றும் பிரிஞ்சி இலையை போடவும். பின் அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வேகும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து, தக்காளி மிருதுவாகும் வரை கிளறி விடவும். பிறகு நறுக்கிய உருளைக் கிழங்கு சேர்த்து இரண்டு பிரட்டு பிரட்டி, அரைத்து வைத்த மசாலாவை ஊற்றவும். உப்பு போட்டு, தண்ணி சட்னி பதம் இருக்கும்படி தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். பச்சை வாசனை போகும்வரை வைத்திருந்து இறக்கவும். சாஃப்ட் தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்க சுவையான வெங்காய கொத்ஸு.
இட்லிக்கு தொட்டுக்கையில், இட்லி மீது 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடுவது சூப்பர்!