

வெஜிடபிள் ரோல்
தேவையான பொருட்கள்:
துருவிய கேரட் – 1 கப்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – 1 கப்
பீன்ஸ் (பொடியாக நறுக்கியது) – 1 கப்
காலிஃபிளவர் (பொடியாக நறுக்கியது) – 1 கப்
வேகவைத்த பட்டாணி – 1 கப்
புதினா – ஒரு கைப்பிடி
கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
கோதுமை மாவு – ½ கிலோ
மைதா மாவு – 1 கப்
கடலை மாவு – 2 ஸ்பூன்
வெள்ளை ரவை – 2 ஸ்பூன்
வேர்க்கடலை (ஒன்று இரண்டாக உடைத்தது) – 1 கப்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
நெய் – 2 ஸ்பூன்
தாளிக்க: கடுகு உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன்
முதலில் கோதுமை மாவுடன் உப்பு, கடலை மவு, ரவை சேர்த்து சப்பாத்தி மாவுபோல பிசைந்து வைக்கவும்.
ஸ்டஃப் மசாலா (காய்கறி கலவை) செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய காய்கறிகளை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு கிளறி வதக்கவும். இறுதியாக புதினா மற்றும் கொத்தமல்லி தழையை நறுக்கி சேர்த்து கிளறி இறக்கவும்.
ரோல் தயாரிக்கும் முறை:
பிசைந்து வைத்துள்ள மாவை மெல்லிய பெரிய சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும். மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல குழைத்து வைக்கவும்.
சப்பாத்தியில் தேவையான அளவு காய்கறி கலவையை வைத்து பரப்பி ரோல் போல் சுருட்டவும். முனைகளை மடக்கி மைதா பேஸ்ட் கொண்டு ஒட்டவும்.
பொரிக்கும் முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெஜிடபிள் ரோல்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொன்னிறமாக பொரிக்கவும். பிறகு வேர்கடலை மற்றும் கருவேப்பிலையை நெய்யில் வறுத்து எடுக்கவும்.
பொரித்த ரோல்களை இரண்டாக வெட்டி தட்டில் வைக்கவும். அதன் மேல் வறுத்த வேர்கடலை மற்றும் கருவேப்பிலை தூவி சூடாக பரிமாறவும்.