
நாங்கள் காஷ்மீர் சென்றபோது காஷ்மீரில் மூன்லைட் என்ற கடையில் வித்தியாசமான இந்த பர்பியை சாப்பிட்டு அதன் ருசியில் மயங்கி ரெசிபி கேட்க அவர் சிரித்துக் கொண்டே பிசினஸ் ரகசியம் எல்லாம் கேட்கிறீர்களே என்று சொல்லி செய்முறையை சொல்ல மறுத்துவிட்டார். விடுவோமா மெல்ல மெல்ல ருசித்து அதை இப்படித்தான் செய்திருப்பார்கள் என நினைத்து வீட்டிற்கு வந்ததும் செய்து பார்த்தேன். 95% அதே சுவை கிடைத்தது.
வால்நட் 200 கிராம்
வெல்லம் 200 கிராம்
நெய் 1/2 கப்
சுக்கு பொடி ஒரு ஸ்பூன்
ஏலப்பொடி ஒரு ஸ்பூன்
வால்நட் பருப்புகளை வெறும் வாணலியில் சூடு வர வறுத்து மிக்ஸியில் நைசாக இல்லாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அடிகனமான உருளி அல்லது வாணலியில் வெல்லத்தை பொடித்து போட்டு கால் கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் கல்மண் போக வடிகட்டி எடுத்து வாணலியில் விட்டு கொதிக்க விடவும். அடுப்பை நிதானமாக எரிய விட்டு பொடித்த வால்நட் பவுடர், ஏலப்பொடி, சுக்கு பொடி சேர்த்து நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கைவிடாமல் கிளறவும். நன்கு சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் அந்த கலவையை போட்டு சமமாக பரப்பி விடவும். சிறிது ஆறியதும் விருப்பமான வடிவில் துண்டுகள் போடவும்.
சுவையும் சத்தும் நிறைந்த வால்நட் பர்பி ரெடி. சூடாக இருக்கும்போதே மேலே துருவிய பாதாம், முந்திரி துண்டுகளை தூவி அலங்கரிக்க சூப்பராக இருக்கும்.