சப்பாத்திக்கு பன்னீர் வேண்டாம்... தாபா ஸ்டைல் தம் ஆலு வீட்லயே இப்படி செஞ்சு பாருங்க!

ரெஸ்டாரண்ட் சுவையை மிஞ்சும் காரசாரமான நார்த் இந்தியன் ஸ்டைல் தம் ஆலு வீட்டிலேயே எளிதாக 20 நிமிடங்களில் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்!
dum aloo recipe தம் ஆலு
dum aloo recipe தம் ஆலுAI Image
Updated on

சப்பாத்தி, நாண், பூரி என்றாலே தொட்டுக்கொள்ள என்ன செய்வது என்ற குழப்பம் பலருக்கும் வரும். வழக்கமான தக்காளி தொக்கு, சென்னா மசாலாவை விட்டுவிட்டு கொஞ்சம் வித்தியாசமாக நார்த் இந்தியன் ஸ்டைலில் சுவையான ஒரு கிரேவி செய்தால் எப்படி இருக்கும்?. உருளைக்கிழங்கை வைத்து தாபாக்களில் கிடைக்கும் அதே காரசாரமான தம் ஆலு ரெசிபியை நம் வீட்டிலேயே மிக எளிதாக செய்து அசத்த முடியும். ஆவியில் வேகவைத்து மசாலாக்களை முழுமையாக உருளைக்கிழங்கிற்குள் இறக்கும் இந்த கிரேவியை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • பேபி உருளைக்கிழங்கு - 15 

  • பெரிய வெங்காயம் - 2 

  • தக்காளி - 2 

  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

  • கெட்டித் தயிர் - 4 டேபிள் ஸ்பூன்

  • காஷ்மீரி மிளகாய்த் தூள் - 1.5 டீஸ்பூன்

  • மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

  • கரம் மசாலா, சீரகத் தூள் - தலா 1/2 டீஸ்பூன்

  • கஸ்தூரி மேத்தி - 1 டீஸ்பூன்

  • முந்திரி - 8

  • பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 1

  • எண்ணெய் மற்றும் நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை! 

முதலில் வேகவைத்த சிறிய உருளைக்கிழங்குகளை ஒரு ஃபோர்க் ஸ்பூனால் ஆங்காங்கே லேசாக குத்தி விட்டுக்கொள்ளுங்கள். இப்படி செய்தால் தான் மசாலா உள்ளே இறங்கும். ஒரு அகலமான கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, இந்த உருளைக்கிழங்குகளை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 

dum aloo recipe தம் ஆலு
dum aloo recipe தம் ஆலுAI Image

இப்போது அதே கடாயில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளிக்கவும். அதன்பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.

இஞ்சி பூண்டு வதங்கியவுடன் தக்காளி விழுது சேர்த்து, அதோடு காஷ்மீரி மிளகாய்த் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை நன்றாக வதக்க வேண்டும். மசாலா தொக்கு போல சுருண்டு வந்ததும், அடுப்பை முற்றிலும் குறைத்து வைத்துவிட்டு கெட்டித் தயிர் மற்றும் முந்திரி விழுது சேர்த்து கிளறுங்கள். 

முந்திரி விழுதுதான் கிரேவிக்கு ரிச்சான சுவையைத் தரும். இப்போது வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்குகளை கிரேவியில் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும். இந்த தம் ஆலு செய்முறையின் முக்கிய கட்டமே பாத்திரத்தை காற்று புகாமல் மூடி, மிகக் குறைந்த தீயில் 10 நிமிடங்கள் 'தம்' போடுவது தான்.

பத்து நிமிடங்கள் கழித்து மூடியை திறந்தால், எண்ணெய் மிதக்க வீடு முழுக்க மணக்கும் கிரேவி ரெஸ்டாரண்ட் பதத்திற்கு திக்காக மாறி இருக்கும். கடைசியாக கைகளில் கசக்கிய கஸ்தூரி மேத்தி மற்றும் சிறிது மல்லித்தழையை தூவி அடுப்பை அணைத்து விடலாம். சுடச்சுட நாண் அல்லது சப்பாத்தியை பிய்த்து இந்த காரசாரமான கிரேவியில் தொட்டு சாப்பிட்டால் அதன் சுவை வேற லெவலில் இருக்கும். 

இந்த வார இறுதியில் பெரிய ஹோட்டல்களுக்கு செல்வதை தவிர்த்து, வீட்டிலேயே இந்த அருமையான தம் ஆலு செய்து குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்துங்கள்.

logo
Kalki Online
kalkionline.com