
ரசம் செய்வதில் பலவகை உண்டு. தூதுவளை இலைகள் சேர்த்து செய்வது மூலிகை ரசம். தக்காளி, எலுமிச்சம் பழம் மற்றும் அன்னாசிப்பழம் சேர்த்து ரசம் வைப்பது இன்னொரு வகை. நாம் இப்போது இங்கு கவர்ச்சிகரமான சிவப்பு மற்றும் மஜெந்தா நிறத்தில் தக்காளி சேர்க்காமல் ஒரு சுவையான ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
பீட்ரூட் ரசம்
தேவையான பொருட்கள்:
1. ஜீரகம் 1டேபிள் ஸ்பூன் 2.வெந்தயம் 1டீஸ்பூன்
3.கொத்தமல்லி விதை 1டேபிள்ஸ்பூன்
4.கருப்பு மிளகு 1 டீஸ்பூன் 5.பீட்ரூட் 2(மீடியம் சைஸ்)
6.புளி 1 எலுமிச்சம் பழம் அளவு 7.பூண்டுப் பல் 6
8.பச்சை மிளகாய் 3 9.கறிவேப்பிலை 2 இணுக்கு
10.சிவப்பு மிளகாய் 1 11.கடுகு 1 டீஸ்பூன்
12.கொத்தமல்லி இலைகள் 1 டேபிள் ஸ்பூன்
13.மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
உப்பு, தண்ணீர், எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். பீட்ரூட்டை கழுவி தோல் சீவி துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு நன்கு வேகவைத்துக் கொள்ளவும். பின் அதை மிக்ஸியில் போட்டு மசிய அரைத்துக் கொள்ளவும். பூண்டை உரித்து பச்சை மிளகாயுடன் சேர்த்து நசுக்கிக் கொள்ளவும்.
மிளகு, ஜீரகம், வெந்தயம், கொத்தமல்லி விதை ஆகியவற்றை கடாயில் போட்டு எண்ணெய் விடாமல் மீடியம் தீயில் வறுத்து, மிக்ஸியில் போட்டு பவுடர் ஆக்கிக்கொள்ளவும். ஒரு வாயகன்ற கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
அதில் கடுகு சேர்த்து வெடித்ததும், சிவப்பு மிளகாயை கிள்ளிப் போட்டு, கறிவேப்பிலை சேர்க்கவும். பின் நசுக்கிய பூண்டு பச்சை மிளகாயை போடவும். நன்கு மணம் வந்ததும் அரைத்து வைத்த பீட்ரூட் கூழை ஊற்றவும். பின் அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பொடித்து வைத்த ரசப் பவுடர் ஆகியவற்றை சேர்க்கவும்.
அனைத்தையும் கரண்டியால் நன்கு கலந்துவிட்டு, 1½ கப் தண்ணீர் மற்றும் புளிக்கரைசலை சேர்க்கவும். நீர்த் தன்மையை சரிபார்த்து, ரசம் அளவுக்கு வர மேலும் சிறிது தண்ணீர் தேவைப்பட்டால் சேர்க்கவும். கொதிவந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி இலைகள் சேர்க்கவும். சூடான சாதத்தில் ஊற்றிப்பிசைந்து ஒரு பொரியல் தொட்டுக்கொண்டு உண்ண ஆரோக்கியமும் சுவையும் அளவிட முடியாது!