

கோலாபுரி கிரீன் கிராம் கார்லிக் தால் என்பது, பச்சை பயறு வைத்து செய்யும் சூப்பரான மகாராஷ்டிரா மாநில உணவாகும். இதை சூடான ரொட்டி அல்லது சப்பாத்தி, பூரி அல்லது சாதத்துடன் சாப்பிட அட்டகாசமான சுவையில் இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். வாங்க இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - 200 கிராம்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
ப.மிளகாய் - 3 (காரத்திற்கு ஏற்ப)
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 4
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒருகைப்பிடி + சிறிதளவு
புதினா - சிறிதளவு
காஷ்மீரி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சென்னா மசாலா தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிக்க
பிரியாணி இலை - 1
அன்னாசி பூ - 1
காஷ்மீரி மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
பூண்டு - 5 பல்,
நெய் - 2 டீஸ்பூன்று
செய்முறை
வெங்காயம், பூண்டு கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை பயறை நன்றாக கழுவி குக்கரில் போட்டு அதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
ஒரு சிறிய வெள்ளை துணியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம் அனைத்தையும் சேர்த்து நன்றாக கட்டி அதனை பச்சை பயறுடன் சேர்த்து 6 விசில் வைத்து வேக விடவும். வெந்ததும் இதில் உள்ள மசாலா மூட்டையை எடுத்து விட்டு சற்று ஒன்றும் பாதியாக மசித்து கொள்ளவும்.
மிக்சியில் கொத்தமல்லி, ப.மிளகாய், தக்காளியை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிரியாணி இலை, அன்னாசி பூ போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், சென்னா மசாலா தூள், சேர்த்து வதக்கவும். மசாலா பச்சை வாசனை போக சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
இப்போது மசித்து வைத்த பச்சை பயறை வதக்கிய மசாலாவில் கொட்டி, உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து அனைத்தும் ஒன்று சேர்ந்து வரும் வரை கிளறவும்.
கிரேவி திக்கான பதம் வந்ததும் புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறவும்.
கடைசியாக ஒரு கடாயில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து, சீரகம், பூண்டு, காஷ்மீரி மிளகாய் சேர்த்து தாளித்து மசாலாவில் கொட்டவும். இதுதான் இந்த கிரேவிக்கு கூடுதல் சுவையை கொடுக்கும்.
இப்போது சூப்பரான கோலாபுரி கிரீன் கிராம் கார்லிக் தால் ரெடி.