
எங்கள் வீட்டிற்கு எதிர்வீட்டு தோழி குஜராத்தி. அவர் இதை அடிக்கடி செய்து எங்களுக்கு சாப்பிட தருவார். அவர் செய்வதைப் பார்த்து நாங்களும் கற்றுக்கொண்டோம்.
தால் பாட்டி
செய்யத் தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு- ஒரு கப்
பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது- இரண்டு
தக்காளி பொடியாக அரிந்தது- இரண்டு
சாம்பார் பொடி- ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் -ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி கருவேப்பிலை பொடியாக அரிந்தது -ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
குக்கரில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளிக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளியை நன்றாக வதக்கி, கழுவிய துவரம் பருப்பை அதனுடன் சேர்த்து, சாம்பார் பொடி, மிளகாய்த் தூள், உப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைத்து எடுத்து அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி, நன்றாக கடைந்து எடுத்து வைக்கவும். தால் ரெடி.
பாட்டி செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு- ஒரு கப்
ஓமம்- அரை டீஸ்பூன்
தேவையான அளவு- தண்ணீர், உப்பு, எண்ணெய், நெய்
செய்முறை:
கோதுமை மாவில் உப்பு, ஓமம் சிறிதளவு எண்ணெய், நெய், தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும். அதை நன்றாக பத்து நிமிடம் ஊறவிடவும். அவற்றை சிறு சிறு உருண்டையாக்கி பணியாரக் கல்லில் சிறிதளவு நெய்யைத் தடவி, மிதமான தீயில் ஒவ்வொரு பகுதியாக உருட்டி உருட்டி வேகவிடவும். கிட்டத்தட்ட 13 நிமிடம் ஆகும் அவைகள் வேகுவதற்கு. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பக்கமும் ஆக நன்றாக வேகவிட்டு எடுத்து அவற்றை ஒரு அழகான கிண்ணத்தில் போட்டு வைக்கவும்.
அந்த உருண்டையினை நன்றாக உடைத்து, நெய்யுள்ள கிண்ணத்தில் போட்டு, அதன் மீது தாலை ஊற்றி ஸ்பூனால் எடுத்து சாப்பிடவும். பாட்டியை சும்மா சாப்பிட்டால் ருசியாக இருக்காது. டால் செய்து அதனுடன் நெய்யை சேர்த்து சாப்பிடும்போதுதான் ருசியாக இருக்கும். நல்ல உருண்டையாக செய்வதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொண்டு நெய்யில் வாட்டி எடுப்பது அவசியம்.