வாயில் வைத்ததும் கரையும் மாம்பழ ரவா லட்டு: வீட்டில் ஈஸியாக செய்வது எப்படி?

Mango Rava Laddu Recipe
Mango Rava Laddu Recipe
Updated on

நாம் அன்றாட விசேஷ வீடுகளில் செய்யும் ரவா கேசரி, பால் பாயாசம் இதுபோல் அல்லாமல் ஒரு புதுவிதமான சுவையில் மாம்பழ ரவா லட்டு செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். இது மாம்பழ ருசியில் மிகுந்த சுவையுடையதாக இருக்கும். மாம்பழ ரவா லட்டு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மாம்பழம் - 400 கிராம்

ரவை - 700 கிராம்

சர்க்கரை - 600 கிராம்

தேங்காய் - அரை மூடி

முந்திரி - 100 கிராம்

உலர் திராட்சை - 100 கிராம்

ஏலக்காய் பொடி - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

செய்முறை:

மாம்பழ ரவா லட்டு செய்வதற்கு மாம்பழத்தை தேர்வு செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதற்கு மிகவும் பழுத்த இனிப்பு சுவை அதிகமாக உள்ள மாம்பழமே சிறந்த ரவா லட்டு செய்வதற்கு உகந்ததாகும். மாம்பழத்தை நன்கு கழுவி அதனை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மிகவும் மென்மையாக அரைத்துகொள்ள வேண்டும். இதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் தேவையான அளவு நெய் ஊற்றி ரவையை சேர்த்து மிதமான வெப்பத்தில் வறுத்துக்கொள்ள வேண்டும். இதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் சிறியதாக துருவிய தேங்காயை சேர்த்து நிறம் மாறாத அளவிற்கு மிதமான வெப்பத்தில் வதக்கிக் கொள்ள வேண்டும்.

இதனுடன் வருத்த ரவை அரைத்து வைத்திருந்த மாம்பழக் கலவையை சேர்த்து நன்கு பத்து நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் கலந்துகொள்ள வேண்டும். தேவையான அளவு சர்க்கரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடி செய்து மாம்பழம், ரவை, தேங்காய் கலவையில் சேர்த்து நன்கு லட்டு பிடிக்கும் பதத்திற்கு கிளரிக்கொள்ள வேண்டும்.

வாணலியில் தேவையான அளவு நெய் ஊற்றி உலர் திராட்சை சேர்த்து நன்கு பலூன் பக்குவம் வரும் வரை வதைக்கவும். அதனுடன் முந்திரி பருப்பு சேர்த்து நன்கு சிவந்து வரும் வரை வறுத்து மாம்பழக் கலவையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சுடச்சுட சாதமும், நெய் மணக்கும் பருப்பு பொடியும்! நாவூறும் ரகசிய ரெசிபி இதோ!
Mango Rava Laddu Recipe

இதனுடன் தேவையான அளவு ஏலக்காய்ப் பொடி சேர்த்து இரண்டு நிமிடங்கள் ஆறவிட வேண்டும். கை பொறுக்கும் அளவிற்கு சூட்டுடன் இருப்பதே லட்டு பிடிப்பதற்கு தேவையான பக்குவமாகும். இந்தப் பக்குவம் வந்தவுடன் லட்டுவாக உருண்டை வடிவத்தில் பிடித்து வைக்க வேண்டும். புதுமையான சுவை மிகுந்த கமகமக்கும் அனைவரும் விரும்பக்கூடிய மாம்பழ லட்டு தயார். அன்றாட நாம் செய்யும் இனிப்பு வகைகளை காட்டிலும் இது ஒரு புதுவிதமான சுவையில் மிகவும் நன்றாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com