முளைக்கட்டிய பாசிப்பயறில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. பாசிப்பயறு சாட் சாப்பிடுவதற்கு சுவையாகவும் அதே சமயம் ஆரோக்கியமாகவும் உள்ள ஒரு உணவு வகையாகும்.
தேவையான பொருட்கள்;
பாசிப்பயறு - ஒரு கப் (100 கிராம்)
உருளைக்கிழங்கு - இரண்டு சிறியவை
தக்காளி - ஒன்று
எலுமிச்சைப்பழம் - அரை மூடி
பச்சை மிளகாய் - இரண்டு
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
சாட் மசாலா - ஒரு ஸ்பூன்
கருப்பு உப்பு - அரை ஸ்பூன்
உப்பு - அரை ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
பெரிய வெங்காயம் - சிறியது ஒன்று
நறுக்கிய கொத்தமல்லித்தழை - இரண்டு ஸ்பூன் நறுக்கியது
செய்முறை;
பாசிப்பயறை தண்ணீரில் இரண்டு மூன்று முறை கழுவிக் கொள்ளவும். பின் அதை வடிகட்டி விட்டு சுத்தமான தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இரவு முழுவதும் ஊறிய பின் மறுநாள் காலை தண்ணீரை வடிகட்டி விட்டு மீண்டும் ஒரு முறை சுத்தமான நீரில் கழுவி விட்டு அதை முளைக்க வைக்கவும். ஹாட் பாக்கில் போட்டு மூடினால் நன்றாக முளை கட்டிவிடும். காலையில் ஊற வைத்தால் இரவு முளை கட்டிவிடும்.
ஒரு வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் அரை ஸ்பூன், உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். முளைகட்டிய பாசிப்பயறை அதில் போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு பாசிப்பயறை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய் தக்காளி கொத்தமல்லி போன்றவற்றை பொடிப்பொடியாக அரிந்து கொள்ளவும். சீரகத்தை லேசாக வாணலியில் போட்டு வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முளைக்கட்டிய பாசிப்பயறு போட்டு அதனுடன் உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கருப்பு உப்பு, சாட் மசாலா, சீரகத்தூள், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் விட்டு நன்றாக கலக்கி கொள்ளவும். கொத்தமல்லி தழை கொண்டு அதை அலங்கரிக்கவும். இப்போது சத்தான சுவையான பாசிப்பயறு சாட் தயார்.