அடுத்த மனிதரில் உங்களைத் தேடாதீர்கள்!

motivation image
motivation imageImage credit - pixabay.com

-மரிய சாரா

'நாலு பேர் நாலு விதமாக பேசுவாங்க', 'அவங்க என்ன நினைப்பாங்க, இவங்க என்ன நினைப்பாங்க', 'அக்கம்பக்கத்து வீட்ல ஏதாவது சொல்லிடுவாங்க' - இப்படி பல நேரங்களில் நாம் நமக்கு,  நமக்கானதைச் செய்துகொள்ளக்கூட அடுத்தவர் என்ன நினைப்பார்களோ என்பதை வைத்துத்தான் முடிவு செய்துகொள்கிறோம். ஆக, நமது வாழ்வை, நாம் அறியாமலேயே மற்றவர்கள்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்.

எப்போதும் அடுத்தவர்கள் மூளையில் நம்மைப் பற்றி என்ன இருக்கிறது, அவர்கள் என்ன நினைக் கிறார்கள், என்னைப்பற்றி தவறாக நினைத்து விடுவார்களோ என்பதைப் பற்றிதான் நாம் யோசித்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் இப்படி மற்றவர் நம்மைப்பற்றி நினைப்பதெல்லாம் நம்மை, நமது வாழ்வை எந்த விதத்திலும் மாற்றிவிடாது.

நாம் ஒரு முறைதான் பிறக்கிறோம். நமக்கு விதிக்கப்பட்ட வாழ்வின் ஆயுள் என்பது எவ்வளவு நாள் என்பதெல்லாம் தெரியாது. அவரவர் தம் வாழ்வைச் செம்மையாய் வாழ்வதற்காகத்தான் நாம் ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் படைக்கப்பட்டிருக்கிறோம். எப்போதும் நமது மகிழ்ச்சி என்பதுதான் நமது வாழ்வில் நிறைந்திருக்க வேண்டுமே தவிர, அடுத்தவரைப் பற்றிய சிந்தனைகளில் நாம் வாழ்வது நல்லதல்ல.

பிடித்த உடைகளை அணிவதிலிருந்து, பிடித்தவாறு வாகனம், வீடு என வாழ்வது, பிடித்தவர்களிடம் பேதமின்றி பழகுவது வரை, அனைத்திலும் நமது மனம் சொல்வதைத்தான் நாம் கேட்க வேண்டும், செய்ய வேண்டும். ஏனென்றால் இது நமது வாழ்க்கை. நமது உரிமை, நமது சுதந்திரம்.

இப்படி அடுத்தவர்களைப்பற்றி மட்டுமே நினைத்து தங்கள் வாழ்வை, எதிர்காலத்தைக் கட்டமைக்கும் எவரும் உண்மையில் நிம்மதியாக சந்தோஷமாக இருப்பதில்லை. எந்த நேரமும் அடுத்தவரைப் பற்றிய எண்ண ஓட்டங்கள்தான் அவர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும்.

ஆனால் தனது மனம் சொல்வதைக் கேட்டு தனது விருப்பங்களை நிறைவேற்றி, மற்றவர் பற்றி கண்டுகொள்ளாமல், யோசிக்காமல் வாழ்பவர்கள் சிகரத்தைத் தொட்டவர்களாக சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர்.

பார்ப்பவர்கள் எல்லோருக்கும் நாம் தங்கமானவர்களாக தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அப்படித் தெரியவைக்க நாம் முயற்சி செய்தால் கடைசிவரை முயன்று கொண்டுதான் இருப்போம். மற்றவர் பார்வையில் நாம் தங்கமா தகரமா என்பதைப் பற்றி நாம் என்றுமே யோசிக்கக்கூடாது. நமக்கு நாம் விலைமதிப்பற்ற தங்கம்தான் எப்போதும், எந்த நிலையிலும். விமர்சனங்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காமல் கடந்துசெல்வது என்பதுகூட தனித் திறமைதான். அதற்கும் தனி மன வலிமை வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அறுசுவை தெரியும், அதென்ன ‘உமாமி’ சுவை?
motivation image

நம்மைப்பற்றி நல்லதாகவோ, தீயதாகவோ பேசுபவர்கள் அவர்களின் ஆயுள் முழுதும் அப்படி பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். நாம் என்ன செய்தாலும் நம்மீது விமர்சனங்கள் எழத்தான் செய்யும். விமர்சனங்கள் உண்மையா பொய்யா என நாம் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் நிச்சயம் இல்லை. அது நமது வேலையும் இல்லை.

தன்னைப் பற்றிய உயரிய எண்ணம் ஒருவருக்கு அவருக்குள்ளாக இல்லையெனில், மற்றவர்களுக்கு மட்டும் எப்படி அந்த எண்ணம் அவர் மீது வர சாத்தியம் இருக்கும்? 

சொல்லுங்களேன் நண்பர்களே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com