வேப்பம் பூவை வைத்து ரசம், குழம்பு, துவையல் செய்வது எப்படி?

வேப்பம்பூ துவையல்
வேப்பம்பூ துவையல்Image credit; youtube.com

வேப்பம்பூ ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களில் மட்டுமே கிடைக்கக்கூடியது. நம் வீட்டிலோ அல்லது அருகிலோ வேப்பமரம் இருந்தால் அவற்றிலிருந்து உதிரும் பூக்களை எடுத்து சுத்தம் செய்து வெயிலில் நன்கு காயவைத்து டப்பாவில் பத்திரப்படுத்த ரசம், குழம்பு, பச்சடி, வேப்பம்பூ பொடி, துவையல் என செய்து அசத்தலாம்.

வேப்பம்பூ துவையல்:

வேப்பம்பூ 2 ஸ்பூன் 

இஞ்சி துண்டு சிறிது 

பெரிய நெல்லிக்காய் 2 

கறிவேப்பிலை ஒரு கைப்பிடி 

உப்பு தேவையானது 

புளி எலுமிச்சை அளவு 

உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்

மிளகாய் வற்றல் 6 

பெருங்காய பொடி சிறிது

வெல்லம் ஒரு துண்டு

வாணலியில் உளுத்தம் பருப்பு, மிளகாய் இரண்டையும் சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து அத்துடன் காய வைத்த வேப்பம்பூ 2 ஸ்பூன் சேர்த்து வறுக்கவும். தோல் நீக்கிய இஞ்சி துண்டு சிறிது, கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, பெரிய நெல்லிக்காயை கொட்டை எடுத்து நறுக்கியது எல்லாவற்றையும் போட்டு நன்கு சூடு வர வதக்கி எடுக்கவும். சிறிது ஆறியதும் உப்பு, தேவையான அளவு புளி, வெல்லம் சேர்த்து அரைத்தெடுக்கவும். கடைசியாக பெருங்காயத்தூள் சேர்த்து நல்லெண்ணையில் கடுகு தாளித்துக் கொட்ட சுவையான வேப்பம்பூ இஞ்சி துவையல் ரெடி.

வேப்பம்பூ குழம்பு:

துவரம் பருப்பு 2 ஸ்பூன்

மிளகு சீரகம் 1 ஸ்பூன்

மிளகாய் 2

வேப்பம்பூ 2 ஸ்பூன்

உப்பு  சிறிது

புளி எலுமிச்சை அளவு

கருவேப்பிலை சிறிது

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

பச்சரிசி 2 ஸ்பூன்

வெங்காயம் 1

தக்காளி 1

நல்லெண்ணெய் 2 ஸ்பூன்

வேப்பம்பூ குழம்பு
வேப்பம்பூ குழம்புImage credit; youtube.com

வாணலியில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, மிளகாய், சீரகம் சேர்த்து சிறிது எண்ணெய் விட்டு நன்கு வறுக்கவும். கடைசியாக பச்சரிசி 2 ஸ்பூன் சேர்த்து வறுத்தெடுத்து சிறிது ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு 2 ஸ்பூன் வேப்பம்பூவை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் சமத்தாக சாப்பிட 10 எளிய டிப்ஸ்!
வேப்பம்பூ துவையல்

கடுகு, கறிவேப்பிலையை நல்லெண்ணெயில் தாளித்து பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கி புளியை நீர்க்க கரைத்து விட்டு தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். புளி வாசனை போனதும் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து இரண்டு கொதி கொதித்ததும் இறக்கி ஒரு துண்டு வெல்லம், வறுத்து வைத்துள்ள வேப்பம்பூவை சேர்க்க ருசியான மருத்துவ குணம் நிறைந்த வேப்பம்பூ குழம்பு தயார்.

சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு குழம்பு சேர்த்து சுட்ட அப்பளத்துடன் சாப்பிட ஆஹா ஹா என்ன சுவை என சொக்கித்தான் போவோம்.

வேப்பம்பூ ரசம்:

புளி  எலுமிச்சை அளவு 

துவரம் பருப்பு 1/2 கப் 

மிளகு 1 ஸ்பூன்

சீரகம் 1/2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் 1

தனியா 1 ஸ்பூன் 

தக்காளி 1

உப்பு தேவையானது

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

தாளிக்க : கடுகு ,வேப்பம்பூ 2 ஸ்பூன்,நெய், கறிவேப்பிலை

வேப்பம்பூ ரசம்
வேப்பம்பூ ரசம்Image credit; youtube.com

முதலில் வாணலியில் நெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, வேப்பம்பூவை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அடுத்து மிளகு, சீரகம், தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடி பண்ணவும். துவரம் பருப்பை சாதத்துடன் குக்கரில் வைத்து நன்கு குழைவாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 

புளியை நீர் விட்டு நன்கு கரைத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான உப்பு, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.  பருப்பை நீர்க்க கரைத்து கொதிக்கின்ற புளிக்கரைசலில் விட்டு பொடித்து வைத்துள்ள தனியா, மிளகு, சீரகம், மிளகாய்ப் பொடியை சேர்த்து பெருங்காயத்தூளையும் சேர்த்து மொச்சு வந்ததும் (கொதிக்க விட வேண்டாம்) இறக்கவும். இப்பொழுது நெய்யில் பொரித்து வைத்துள்ள கடுகு, கருவேப்பிலை, வேப்பம்பூவை சேர்த்து கலந்து விட மணக்க மணக்க வேப்பம்பூ ரசம் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com