சிரமமின்றி செய்யலாம் 'ஹோம் மேட்' சாக்லேட்ஸ்!

home made Chocolates
home made chocolates
Published on

நம்மை புத்துணர்வுடன் வைத்திருக்கும் இனிப்பு சாக்லேட்டுகளை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. மிதமான அளவில் சாக்லேட்டுகளை சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக இதய நோய், பக்கவாதம், மற்றும் மனநிலை சார்ந்த பிரச்சனைகள் போன்றவற்றை எதிர்கொள்ளவும் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது என்று சொல்லப்படுகிறது. காரணம் சாக்லேட் சாப்பிடும்போது நம் உடலில் செரோடோனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இதுவே மனநிலையை மேம்படுத்துகிறது.

சரி, இந்த சாக்லேட்டுகளை கடைகளில் வாங்காமல் வீட்டில் செய்ய முடியுமா? எளிதாக செய்யலாம். சாக்லேட் செய்யத் தேவையான அனைத்தும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். இங்கே எளிய சாக்லேட் ரெசிபிகள் உங்களுக்காக..

1. பேசிக் சாக்லேட் எனப்படும் அடிப்படை சாக்லேட்

தேவை

கொக்கோ பவுடர் - 1/4 கப்

பால் பவுடர் - 1/4 கப்

வெண்ணெய் - 1/4 கப்

சர்க்கரை - 1 கப்

ட்ரே- 1

பட்டர் பேப்பர் - 1

செய்முறை

அடுப்பை சிம்மில் வைத்து அதன் மேல் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு உடன் சிறிது நீர் விட்டு கொதித்து கம்பி பாகு வந்ததும் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்தவுடன் அடுப்பை அணைத்து மேலும் நன்கு கிளறி வைக்கவும். அடுத்து ஒரு சுத்தமான பவுலில் பால் பவுடர் மற்றும் கொக்கோ பவுடரை கலந்து வைத்துக் கொள்ளவும். அதை சிறிது சிறிதாக வெண்ணெய் மற்றும் சக்கரை கலவையில் சேர்த்துக் கலந்து பட்டர் பேப்பர் வைத்த தட்டு அல்லது ட்ரேயில் கொட்டி சமன் செய்து அறை வெப்ப நிலையில் சில நிமிடங்கள் வைத்து பிறகு விருப்பமான வடிவத்தில் கட் செய்து குளிர்சாதன பெட்டியில் கால் மணி நேரம் வைத்து எடுத்தால் பேசிக் சாக்லேட் ரெடி. இதுதான் எல்லா சாக்லேட் வகைகளுக்கும் அடிப்படை செய்முறை.

ஹோம் மேட் சாக்லேட் எனப்படும் சாக்லேட்டுகள் பெரும்பாலும் இந்த முறையில் தான் தயாரிக்கப்படுகின்றன. இதில் கோகோ பவுடர் இன் அளவு தான் முக்கியம். கொக்கோ பவுடர் அதிகமானால் டார்க் சாக்லேட்டும் குறைந்தால் லைட் சாக்லேட்டும் கிடைக்கும் .

2. ஹோம் மேட் ஒயிட் சாக்லேட்

தேவை

ஒயிட் சாக்லேட்- 100 கிராம் (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)

ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒயிட் சாக்லேட் சிறு துண்டுகளாக உடைத்துப் போட்டு குக்கிங் ஆயில் சேர்த்து டபுள் பாயிலிங் முறையில் நன்கு உருக்கி இறக்கி பத்து நிமிடம் கழித்து பிறகு கோன் மூலம் மோல்டில் ஊற்றி ஃப்ரிட்ஜில் இருபது நிமிடங்கள் வைத்து இறுகியதும் எடுத்தால் ஒயிட் சாக்லேட் ரெடி.

டபுள் பாய்லிங் முறை

டபுள் பாய்லிங் முறை என்பது, சூடான அல்லது கொதிக்கும் நீரை ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து, அதன் மேல் ஒரு சிறிய கிண்ணத்தில் சமைக்கும் பொருளை வைத்து சமைக்கும் ஒரு நீராவி சமையல் முறையாகும். இந்த முறையில், சமைக்கும் பொருள் நேரடியாக வெப்பத்துடன் தொடர்பு கொள்வதில்லை. மாறாக, நீராவியால் மறைமுகமாக சூடேற்றப்படுகிறது. மென்மையான வெப்பம் தேவைப்படும் குறிப்பாக சாக்லேட் உருக, மாய்ஸ்சர் மாவு போன்றவற்றை தயார் செய்ய இது சிறந்த வழியாகிறது.

3. ரெடிமேட் காஃபிபைட் சாக்லேட்

தேவை

இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 2 டீஸ்பூன் ( ஏதேனும் ஒரு பிராண்ட்)

சாக்லேட் பார் - 100 கிராம்

கன்டென்ஸ்டு மில்க்- 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

கண்டஸ்டண்ட் மில்க் , இன்ஸ்டன்ட் காபி பவுடர் இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். காபி பவுடர் கரையும் வரை கிளறவும். இரண்டும் நன்கு கலந்ததும் இறக்கி ஆற விடவும். இதுதான் சாக்லேட் நடுவே ஊற்ற போகும் பில்லிங். டபுள் பாய்லிங் முறையில் சாக்லேட் பாரை உருக்கிக் கொள்ளவும். மோல்டில் உருகிய சாக்லேட்டை சிறிது ஊற்றி நடுவில் இந்த காபி பில்லிங்கை ஊற்றவும். மறுபடியும் சாக்லேட் கலவையை மேலே ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து இறுகியதும் அவ்வப்போது எடுத்து பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
முட்டையிடும் பாலூட்டி உயிரினம் பிளாட்டிபஸின் விசித்திர குணங்கள்!
home made Chocolates

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com