
சிதம்பரம் நடராஜர் பெருமாள் கோயிலில், சீரக சம்பா சாதத்துடன் இந்த கத்திரிக்காய் கொத்ஸு பிரசாதமாக தயாரிக்கப்படுகிறது. வாட்டிய கத்திரிக்காயின் வாசத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் ஃபிரஷ்ஷாக அரைத்த மசாலாக்களின் கலவையுடன் சாப்பிட தேவாமிர்தமாக இருக்கும். இதை இட்லி, தோசை அல்லது உங்களுடன் பரிமாறலாம். சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் 5-6
சின்ன வெங்காயம் 15
பூண்டு 8-10
வெந்தயம் - ¼ டீஸ்பூன்
மிளகு - ¼ டீஸ்பூன்
சீரகம் - ½ டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா - 3 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் 5-7
பெருங்காயம் - ¼ டீஸ்பூன்
கடுகு - ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் 3-4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து தயாராக வைக்கவும். கத்திரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
இப்போது வெறும் கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் வெந்தயம், மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும். மசாலாக்கள் ஆறிய பிறகு பொடித்துக் கொள்ளவும்.
இப்போது அதே கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு கத்திரிக்காய், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை வதக்கிக் கொள்ளவும். இவை ஓரளவு நிறம் மாறும் வரை வதங்கினால் போதுமானது. கத்திரிக்காயை முழுமையாக வேகவைக்க வேண்டிய அவசியம் இல்லை.
கத்திரிக்காயின் சூடு தணிந்த பிறகு இதனை மிக்ஸியில் சேர்த்து ஒன்றும் பாதியுமாக லேசாக மட்டும் அரைத்துக் கொள்ளவும். இதை முழுமையாக அரைக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா பொடி மற்றும் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். இப்போது புளி தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிவிடவும். எண்ணெய் பிரிந்து வரும்வரை சமைக்கவேண்டும். இப்போது சுவையான சிதம்பரம் கொத்ஸு தயார்.