
துரித உணவுகளில் முதன்மையிடம் பிடிப்பது பீட்சா மற்றும் பர்கர். இதை சாப்பிடுவதே கெடுதல் என்றாலும் இதன் ருசிக்கு அடிமையாகி இதை விரும்புபவர்கள் உண்டு. இதை அதிகம் எடுத்துக் கொள்ளாமல் அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. அதே நேரம் கடைகளில் விற்கப்படும் பீட்சா ஆரோக்கியமானதா என்பது தெரியாது. குழந்தைகளுக்கு வீட்டிலேயே ஆரோக்கியமாக பீட்சா செய்து தருவது நமது கடமை. வீட்டிலேயே பீட்சாவை எளிய முறையில் செய்வது எப்படி? வாருங்கள் பார்ப்போம்..
சீஸ் பீட்சா
தேவையான பொருட்கள்:
மேல் மாவுக்கு
மைதா - 250 கிராம்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
உப்பு -1டீஸ்பூன்
வெண்ணெய் -1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர்- 1டீஸ்பூன்
ஈஸ்ட் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
ஈஸ்டை வெதுவெதுப்பான நீரில் கலந்து வைத்துக் கொள்ளவும். மைதாமாவில் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து அதனுடன் உருகிய வெண்ணெய், உப்பு, கலந்து வைத்த ஈஸ்ட் சேர்த்து நன்கு கலந்து (நாண் செய்ய தயாரிப்பது போலவே) மாவை நன்கு பிசைந்து சற்று வட்டமான விரிவான பாத்திரம் ஒன்றில் நெய் தடவி பாத்திரம் கொள்ளும் அளவுக்கு மாவை அரை சென்டிமீட்டர் கனத்தில் இருக்கும்படி பரத்திக் கொள்ளவும். இதில் வெண்ணெய் தடவி மாவை பேக்கிங் அடுப்பில் வைத்து 350 டிகிரியில் முக்கால் பாகம் வேகும் வரை வைத்து எடுக்கவும். பேக்கிங் அடுப்பு பெஸ்ட் இல்லை எனிலும் அடி கனமான இரும்பு தோசை சட்டியிலும் மூடி வைத்துமுயற்சி செய்யலாம்.
இப்போது பீட்சா உள்ளே வைப்பதற்கு தேவையானவை:
தக்காளி - 6
குடைமிளகாய்- 1
சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்
வெள்ளரிக்காய் -1
பெரிய வெங்காயம் - 1
சீஸ்- 50 கிராம்
பூண்டு- 5 பல்
இஞ்சி- சிறிய துண்டு
மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
உப்பு -சிறிது
நெய் – தேவைக்கு
செய்முறை:
வெங்காயம், பூண்டு, இஞ்சியை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி தக்காளி துண்டுகளை போட்டு நன்கு வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகாய் தூள், சாஸ் போடவும். இந்த மசாலா சாஸ் போல கெட்டியான உடன் இறக்கவும்.
தக்காளிகள், பெரிய வெங்காயம், வெள்ளரிக்காயை வட்ட வடிவில் வெட்டி குடமிளகாயையும் பொடிப்பொடியாக நறுக்கி சுட்டு வைத்திருக்கும் முக்கால் பங்கு வெந்த பீட்சாவின் அடிபாகத்தில் உள்ளே காய்கறிகளை அடுக்கி தயார் செய்த தக்காளி சாஸ் ஊற்றி சீசை துருவி மேலே தூவிக் கொள்ளவும். வெண்ணெய் இரண்டு தேக்கரண்டி மேலே போட்டு மறுபடியும் 10 நிமிடம் 350 டிகிரி சூட்டில் வேகவைக்கவும். வெந்தவுடன் சூடாக இருக்கும் போதே சிறு துண்டுகளாக வெட்டி அப்படியே சாப்பிடலாம். காரம் தேவை என்றால் தற்போது கடைகளில் விற்கும் சில்லி ஃபிளக்ஸ் தூவி விடலாம் அல்லது மிளகு தூள் தூவலாம்.