மழைக்காலத்தில் சூடான ஒரு கப் சூப் குடிப்பது, உடலை உஷ்ணப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடிக்கும் வெஜ் சூப் வீட்டிலேயே எளிதாக செய்யலாம். இது நம் உடலுக்குத் தேவையான பல வகையான காய்கறிகளைக் கொண்டிருப்பதால், மிகவும் சத்து நிறைந்தது. இந்தப் பதிவில் முற்றிலும் வித்தியாசமான முறையில் வெஜிடபிள் சூப் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கேரட் - 2
உருளைக்கிழங்கு - 2
பீன்ஸ் - 1/2 கப்
பச்சை பட்டாணி - 1/4 கப்
தக்காளி - 2
வெங்காயம் - 1
பூண்டு - 3 பற்கள்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 5 கப்
கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
செய்முறை:
முதலில் கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவற்றை நன்றாகக் கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும். இப்போது வதங்கிய மசாலாவில் கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
வதங்கிய காய்கறிகளில் 5 கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். கொதிக்கும் தண்ணீரில் தேவையான அளவு உப்பு சேர்த்து காய்கறிகள் நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும். காய்கறி வெந்த பிறகு அதில் ஒரு பகுதியை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து மீண்டும் சூப்பில் சேர்க்கவும்.
இறுதியாக சூப் தயாரானதும் கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும். சூப்பில் உங்களுக்கு பிடித்த காய்கறிகளை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். சுவையை மேலும் அதிகரிக்க கிரீம் அல்லது பால் சேர்க்கலாம். சூப்பை எப்போதும் சூடாக பரிமாறவும். அப்போதுதான் அதன் சுவை நன்றாக இருக்கும்.