
கெட்டித்தயிரை தண்ணீர் இல்லாமல் ஒரு துணியில் போட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வதக்கிய இஞ்சி, பூண்டு , பச்சை மிளகாய் உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதனை வடிகட்டிய தயிருடன் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொண்டு பிரெட் மேல் தடவி சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இதனை சப்பாத்தி, பூரிக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
பருப்பு, பயறு வகைகளை வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் ரசத்திலோ, சாம்பார் செய்யும் பொழுதோ சேர்த்து கொதிக்கவிட்டு இறக்க ருசி கூடுவதுடன் சத்தும் வீணாகாது.
சப்பாத்திமாவு பிசையும்பொழுது மக்காச்சோள மாவையும் சிறிதளவு சேர்த்து பிசைந்து செய்ய சப்பாத்தி மிகவும் மிருதுவாக வரும்.
உப்புமா செய்தது மீந்துவிட்டால் மைதாமாவில் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். உப்புமாவை சின்ன சின்ன உருண்டைகளாக்கி கரைத்து வைத்துள்ள கரைசலில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து சாப்பிட மிகவும் ருசியான உப்புமா போண்டா தயார்.
மற்றொரு இன்ட்ரஸ்டிங் குறிப்பு மைதா மாவை உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து சப்பாத்திமாவுபோல பிசைந்து சின்ன சின்ன பூரிகளாக இட்டுக் கொள்ளவும். மீந்த உப்புமாக்களை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி தேய்த்து வைத்துள்ள பூரிக்குள் வைத்து மூடி வாழை இலையில் வைத்து தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் சிறிது நெய்விட்டு எடுக்க மிகவும் ருசியான 'கார போளி' தயார்.
ருசியான பக்கோடா செய்ய கடலைமாவுக்கு பதில் பொட்டுக்கடலை மாவு பயன்படுத்த வயிறு சங்கடம் ஏற்படாததுடன் சுவையாகவும் இருக்கும். வெங்காயத்தை மெலிதாக நீளமாக நறுக்கி, பூண்டு, இஞ்சியை தட்டி சேர்த்து பக்கோடா மாவில் போட்டு பிசைந்து செய்ய மணமும் ருசியும் கூடும்.
வீட்டிலேயே வெண்ணெய் எடுக்க விரும்பினால் பாலை காய்ச்சியதும் மூடாமல் சிறிது ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்க அதிக அளவு பாலாடை கிடைக்கும். இவற்றை ஒரு வாரம் போல் சேகரித்து பாட்டில் போட்டு 4 ஸ்பூன் தயிர் கலந்து குலுக்கி எடுக்க வெண்ணெய் சுலபமாக கிடைக்கும்.
விசேஷ நாட்களில் வெல்லத்தைக் காய்ச்சி பாகு எடுக்கும்போது மீந்துவிட்டால் கவலை வேண்டாம். இஞ்சியை தோல் நீக்கி மெல்லிய வட்டங்களாக நறுக்கி சிறிது நெய்யில் வதக்கி வெல்லப்பாகில் போட்டு வைக்க ஜீரணத்திற்கு ஏற்ற அருமையான இஞ்சி முரப்பா ரெடி.
பாயசம் செய்யும்பொழுது நான்கு பாதாம் பருப்பு, ரெண்டு முந்திரிப் பருப்பு, சிறிது தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து பாயசத்தில் கலக்கி கொதிக்கவிட்டு இறக்க மிகவும் ருசியாக இருக்கும்.
கோதுமை மாவை வெறும் வாணலியில் சூடு வர வறுத்து எடுக்கவும். வாணலியில் கடுகு, மிளகாய் வத்தல், உளுத்தம் பருப்பை நல்லெண்ணெய் விட்டு தாளித்து கடுகு பொரிந்ததும் இரண்டு கப் புளித்த மோரைவிட்டு தேவையான உப்பு சேர்த்து நடுக்கொதி வர விடவும். வறுத்து வைத்துள்ள கோதுமை மாவைத் தூவி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறி இறக்க சத்தான கோதுமை மோர் களி தயார்.
குக்கரில் உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றை வேக வைக்கும் பொழுது பாத்திரத்தில் கறை படியாமல் இருக்க ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தை சேர்த்து வேகவைத்தால் கறைபடியாது.
கீரையை சமைக்கும்போது அதன் நிறம் மாறாமல் இருக்க தட்டு போட்டு மூடாமல் திறந்து வைத்து சமைப்பதுடன், சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் நிறம் மாறாமல் பச்சை பசேல் என்று இருக்கும்.
முட்டை வேகவைத்த பாத்திரத்தில் சிறிதளவு புளித்த மோரை விட்டு சிறிது நேரம் கழித்து கழுவ பாத்திரத்தில் வாடை வராது.
பாகற்காய் குழம்பு, பொரியல் போன்றவை செய்யும்பொழுது அதில் ஒரு கேரட் சேர்த்து சமைக்க கசப்பு தெரியாது.