
ஒவ்வொரு நாளும் என்ன காய் தொட்டுக்கொள்ள செய்வது என்று குழம்பித் தவிப்போம். வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை ஒவ்வொருவருக்கும் என்ன வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்து அலுத்து விடுவோம். இதுவே வற்றல், கருவடாம், கூழ் வடாம் என்றால் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
சாம்பார், ரசம், கலந்த சாதங்கள் அனைத்திற்கும் ஒத்துப்போகும் வடாம் போட சிறந்த மாதம் மார்ச் முதல் ஏப்ரல் வரை. மே மாதத்தில் வெயில் அதிகம். அதனால் அதிகம் காய்ந்து வடாம் பொரிக்கும்போது சிவந்து விடும். காற்றும் வீசுவதால் கல்மண்கள் ஈரமாக இருக்கும் வடாம்களில் ஒட்டிக்கொண்டு பொரித்தால் வாயில் கடக் முடக்கென கல்மண் பட்டு ருசியை கெடுத்துவிடும்.
கிள்ளி வைக்கும் வெங்காய வடகம் வகைகளை ஓலைப்பாயில் வைத்து காயவைக்கலாம்.
பிழிந்து இட வேண்டிய வடாம் வகைகளை பிளாஸ்டிக் ஷீட்டிலோ, காட்டன் துணியிலோ காயவைக்கலாம். பிளாஸ்டிக் ஷீட்டில் வடாம்கள் காய்ந்ததும் தானாகவே பெயர்ந்து வந்துவிடும். ஆனால் துணிகளில் போடும்போது காயவைத்ததும் திருப்பிப்போட்டு துணியில் தண்ணீர் தெளித்து எடுக்கவேண்டும்.
முதல்முறையாக வடாம் வத்தல்போட முயற்சிப்பவர்கள் குறைந்த அளவு செய்து பார்த்து பழகிய பின் அதிக அளவில் போடுவது நல்லது.
வடாம் மாவு நன்கு வெந்து கண்ணாடி போல் பளபளப்பாக ஆனதும் இறக்கினால்தான் காய்ந்ததும் தூள் விழாமல் இருக்கும். சிறிது ஆறிய பின்பு எலுமிச்சைசாறு அல்லது புளித்த தயிர் சேர்க்க வடாம் வெள்ளை வெளேரென்று என்று பொரியும்.
வடாத்திற்கு உப்பு போடும்போது குறைவாகவும், காரத்திற்கு பச்சை மிளகாய் அரைத்து சேர்க்கும்பொழுது அதிகமாகவும் போட வேண்டும். அப்பொழுதுதான் வெயிலில் நன்கு காய்ந்ததும் உப்பு தூக்கலாக தெரியும், காரம் அடங்கிவிடும்.
பச்சை மிளகாய், கல் உப்பு, கட்டிப் பெருங்காயம் மூன்றையும் சேர்த்து அரைத்து தண்ணீர் கொதிக்கும் பொழுது அரைத்ததை கலந்து ஒரு கொதி வந்ததும் வடாம் மாவை தூவினால் போல் போட்டு கிளறிவிடவும். வெந்ததும் சிறிது ஆறவிட்டு எலுமிச்சை சாறு கலந்து முறுக்கு அச்சில் பிழியவும். வெயிலில் நான்கு நாட்கள் காய விட்டு எடுக்க வடாம் தயார்.
பொடி உப்பை விட கல் உப்புதான் வடாம், வத்தல், ஊறுகாய்க்கு ஏற்றது. அதேபோல் பச்சரிசியைத்தான் பயன்படுத்த வேண்டும்.
பச்சரிசி ஜவ்வரிசி இரண்டையும் 5:1 என்ற விகிதத்தில் கலந்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொண்டால் கொஞ்சம் கொஞ்சமாக தினம் போடலாம். ஒரேடியாக மொத்தமாக கிளறிப் போட்டால் கை வலி உண்டாகும்.
மீந்த சாதத்திலும் ருசியான வடகம் போடலாம். பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் அரைத்தது, சிறிது கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு கையால் நன்கு பிசைந்து பிளாஸ்டிக் ஷீட்டில் சின்ன சின்ன உருண்டைகளாக கிள்ளி வைக்கவும். காய்ந்தவுடன் பொரித்தால் பக்கோடா போல் மிகவும் ருசியாக இருக்கும்.
குழம்பு வடாம், கீரை வடாம் செய்ய உளுந்து, வெள்ளைக் காராமணி இரண்டையும் உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பூசணிக்காயை துருவி கையால் நன்கு பிழிந்து நீரை எடுத்துவிட்டு சேர்த்து கையால் நன்கு கலந்து கொள்ளவும். பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு ஸ்பூன் கொண்டு சிறிது சிறிதாக விட்டு வெயிலில் காயவைத்து புளி கூட்டு, மோர் குழம்பு, பொரிச்ச கூட்டு, கீரை ஆகியவற்றுக்கு பொறித்துபோட மிகவும் ருசியாக இருக்கும்.
பிரண்டை வடாம் செய்ய பிரண்டையுடன் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்து கொதித்து கிளறும் மாவுடன் சேர்த்து கலந்து செய்ய நல்ல மணத்துடன் மருத்துவ குணம் நிறைந்த பிரண்டை வடாம் தயார்.
எந்த வடாம் போடுவதாக இருந்தாலும் மாவு ரொம்பவும் நீர்க்க இல்லாமல் பார்த்துக் கிளறவும். அதிக தண்ணீர் விட்டு செய்யும் பொழுது வடாம் வெயிலில் காய்ந்ததும் மிகவும் மெல்லியதாக ஆவதுடன் பொரிக்கும் பொழுது நிறைய எண்ணெயையும் குடிக்கும்.