
பொதுவாக, விரதம் இருப்பவர்கள், விரதத்திற்கேற்ற உணவுகளைத் தயாரித்து சாப்பிடுவது வழக்கம். விரத உணவுகள் இடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
பாசிப்பருப்பு கஞ்சி, உப்பில்லாத சப்பாத்தி, சாபூதானா கிச்சடி, பழங்கள், உலர் பழங்கள், இப்படி பல்வேறு விரத உணவுகள் உள்ளன. அவரவர்கள் சௌகரியப்படி, விரத உணவுகளை சாப்பிடுவது வழக்கம். பலர் காப்பி - டீ மட்டுமே குடித்து விரதம் மேற்கொள்வார்கள்.
மராட்டிய மாநிலத்தில், "பிர்னி" எனப்படும் உணவை, விரத நாட்களில் ஸ்பெஷலாக அநேகர் செய்வது வழக்கம். பிர்னியின் மணம் அனைவரையும் ஈர்க்கும் வகையிலிருக்கும் என்றும், பிர்னியை எவ்வாறு செய்வது என்றும், என்னுடைய மராட்டிய சிநேகிதி ஒருவர் கூறியது பின்வருமாறு:
தேவை:
பாஸ்மதி அரிசி 1 கிண்ணம்
நல்ல பால் 3/4 லிட்டர்
சர்க்கரை 1 1/4
கிண்ணம்
கஸ்டர்டு பவுடர் 2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு 15
பாதாம்பருப்பு 10
நெய் 3 டேபிள் ஸ்பூன்
உப்பு கால் சிட்டிகை
செய்தபின் அலங்கரிக்க தேவையானவைகள்:
நெய் 2 டீஸ்பூன்
காய்ச்சாத பால் 3 டீஸ்பூன்
வறுத்த முந்திரி 10
செய்முறை:
முதலில், பாஸ்மதி அரிசியைத் தண்ணீரில் நன்றாக அலம்பவும். தண்ணீரை நன்கு வடித்து, அலம்பிய அரிசியை மிக்ஸியில் போட்டு சற்றே கர-கரப்பாக அரைத்துக் கொள்ளவும். சிறிது பாலில் மிக்ஸ் செய்து வைக்கவும்.
ஒரு டீஸ்பூன் நெய்யை கடாயில் விட்டு காய்ந்ததும், முந்திரி, பாதம் வகைகளைப் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
அடுப்பை மீடியமாக வைத்து கடாயில் பாலை விட்டு காய்ச்சவும். இத்துடன் அரைத்து பாலில் கலந்து வைத்திருக்கும் அரிசியைப் போட்டு, கட்டி தட்டாமல் கிண்டவும்.
பாதிக்கு மேல் வெந்தபின், சர்க்கரையைப்போட்டு கொதிக்க விடவும். கைவிடாமல் கிண்டிக் கொடுப்பது அவசியம்.
எல்லாம் ஒன்று சேர வெந்து வருகையில், கஸ்டர்டு பவுடரைச் சேர்த்து மிக்ஸ் பண்ணி கீழே இறக்குகையில், சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
வறுத்த முந்திரி மற்றும் பாதாம் ஆகியவைகளை ஒன்றிரண்டாக பொடித்து, வெந்த இனிப்பு அரிசிக் கலவையின் மேலாக அலங்காரமாகத் தூவவும். நெய், மற்றும் காய்ச்சாத பாலை பரவலாக விடவும். பிர்னி ரெடி. ஆறியதும், ஃப்ரிட்ஜில் வைத்து விடவேண்டும்.
தேவைப்படுகையில், பிர்னியை ஒரு கப்பில் கொஞ்சமாக எடுத்துப் போட்டு சாப்பிடலாம். நல்ல சுவையுடன், சத்துள்ள, கம-கமவென பாஸ்மதி அரிசி மணக்க, சற்றே ஜில்லென்று இருக்கும் இந்த "விரத பிர்னி" யை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள். ஃபில்லிங்காக இருக்கும்.