
நம்ம பாட்டிமார் காலத்துல கொல்லைப்புறங்களில் அம்மியும் ஆட்டுரலும் கட்டாயம் ஒவ்வொரு வீடுகளிலும் இடம் பெற்றிருக்கும். அதில் அரைத்த சட்டினி சாம்பார் மணம் இப்போது இல்லை என்ற ஆதங்கம் நிறைய உண்டு. இருந்தாலும் அறிவியல் முன்னேற்றங்களினால் மாறிவிட்ட நவீன சமையலறையில் அம்மிக்கும் ஆட்டுக்கல்லுக்கும் பதிலாக மிக்ஸர் கிரைண்டர் இடம் பிடித்துவிட்டது.
முன்பு மிக்ஸி வந்த புதிதில் விரைவில் சூடாகும் தன்மையினால் உணவு விரைவில் கெட்டுவிடும் என்ற கருத்து இருந்தது. ஆனால் இப்போது இன்னும் நவீனமாக மாவையும் எளிதில் அரைக்கும் வண்ணம் வந்த சாதனம்தான் மிக்ஸர் கிரைண்டைர்.
இது இல்லாமல் உணவு எதையுமே செய்ய இயலாத அவசர நிலை இப்போது உள்ளது. இந்த மிக்ஸர் கிரைண்டர் இருந்தால் இன்ஸ்டன்ட் உணவுகளை நம்மால் எளிதில் செய்துவிட முடியும். அப்படி செய்யப்படும் சில ரெசிபிகள் இங்கு பார்ப்போம்.
ரவா ஓட்ஸ் பச்சரிசி மாவு தோசை
சாதாரணமாக ரவா தோசைக்கு ரவையை மிளகாய் ஜீரகம் மிளகுடன் காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைப்போம். ஆனால் உடனடி ரவா தோசைக்கு, ஒரு கப் ரவை அரை கப் ஓட்ஸ் மற்றும் அரை கப் பச்சரிசி மாவுடன் 1 டேபிள்ஸ்பூன் மைதா சேர்த்து இரண்டு வற்றல் மிளகாய், சீரகம், மிளகுடன் மிக்ஸர் கிரைண்டரில் நன்றாக அரைத்து எடுத்து உப்பு, தயிர் கலந்து தேவையான தண்ணீர் ஊற்றி கலந்து அரை மணி நேரம் வைக்கவும். விருப்பப்பட்டால் இதில் தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, உடைத்த முந்திரி, உடைத்த மிளகு சீரகம் வதக்கி போடலாம். இதை தளர்வாக நன்கு காய்ந்த தோசை தவாவில் மாவை விசிறிவிட்டு தோசை வார்த்து எடுத்தால் ஹோட்டல் ரவா தோசை மொறுமொறுப்பாக வரும்.
இன்ஸ்டன்ட் இட்லி தோசை
சில நேரங்களில் அளவு தெரியாமல் வைத்த சோறு மீதம் ஆகிவிடும். அதில் ஒரு கப் சாதத்துக்கு அரை கப் ரவை, மற்றும் அரை கப் தயிர் என்ற அளவில் சேர்த்து தேவையான உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு நைசாக அரைக்கவும். (தண்ணீர் அதிகம் விடக்கூடாது. ஏற்கனவே சோற்றில் நீர் இருக்கும்) இதில் சிறிது சீரகம் கலந்து அடுப்பை மிதமான தீயில் வைத்து தோசையாகவும் வார்த்து எடுக்கலாம். அல்லது சிறிய சிறிய கிண்ணங்கள், இட்லி தட்டுகளில் நெய் அல்லது எண்ணெய் தடவி இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுக்கலாம். இந்த இன்ஸ்டன்ட் இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும் என்பதால் சூடாக உடனே சாப்பிட்டுவிட வேண்டும்.
தக்காளி ஆனியன் ஊத்தப்பம்
நன்கு பழுத்த 4 தக்காளிகளுடன் அரை கப் கோதுமை மாவு சேர்த்து நறுக்கிய நான்கு பெரிய வெங்காயங்கள் மற்றும் இஞ்சி சிறிது, பூண்டு 4, சீரகம் மிளகு சேர்த்து மிக்ஸர்கிரைண்டரில் நன்கு அடியுங்கள். பின் தேவையான உப்பு கலந்து காயவைத்த தோசை சட்டியில் சற்று மொத்தமாக அடை போல் ஊற்றி எடுக்கலாம். தேவைப்பட்டால் மேலே சீஸ் போட்டு குழந்தைகளுக்கு தரலாம். இது சத்தாகவும் இருக்கும். உடனே செய்யக்கூடிய இன்ஸ்டன்ட் ஊத்தப்பம் ஆகவும் இருக்கும்.
ரெடிமேட் சட்னி வகைகள்
மதிய நேரம் சூடான சோறு ரெடியாக இருக்கும். அதற்கு போட்டு பிசைந்து சாப்பிட மிக்ஸர் கிரைண்டரில் இது போன்ற சட்னிகள் வரப்பிரசாதம்.
முதலில் தேங்காய் சட்னி. இதற்கு ஒரு கப் தேங்காய் துருவலுடன் சிறிது புளி மற்றும் கரண்டியில் எண்ணெய் விடாமல் வறுத்த கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, 2 வற்றல் மிளகாயுடன், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கலாம். தேங்காய்க்கு பதிலாக கொத்தமல்லித்தழை அல்லது புதினாவை சேர்த்தும் இதேபோல் சட்னி அரைக்கலாம். இது போன்ற சட்டினிகள் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுவதாக இருக்கும்.
இந்த ரெசிபிகள் வெறும் சாம்பிள்தான். மிக்ஸர் கிரைண்டரில் இது போல் எண்ணற்ற வகை உணவு வகைகள் செய்து அசத்தலாம்.