
வடை எண்ணெய் அதிகம் குடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
வடைக்கு அரைக்கும்போது சிறிது அரிசி மாவு சேர்த்து அரைத்து செய்யலாம் அல்லது ரவையை சேர்த்துக் கொள்ளலாம். வடை சுடும் எண்ணெயில் சிறிது உப்பை சேர்த்து விட எண்ணெய் அதிகம் குடிக்காது.
பாயசம் நீர்த்துவிட்டால் அதனை கெட்டியாக்க என்ன செய்யலாம்?
பாயசம் நீர்த்துவிட்டால் 4 பாதாம் பருப்பு, 4 முந்திரி பருப்புடன் ஒரு ஸ்பூன் ரவை சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடித்து கலந்து அடுப்பில் வைத்து எடுக்க பாயசம் கெட்டியாகி ருசியும் கூடிவிடும்.
குழம்பில் காரம் அதிகமானால் எப்படி சரி செய்வது?
குழம்பில் காரம் அதிகமானால் தேங்காய் பால் சிறிது சேர்க்கலாம். தக்காளி 1, வெங்காயம் 1 இரண்டையும் வதக்கி அரைத்து சேர்க்க காரம் குறைந்துவிடும்.
பஜ்ஜி ருசியாக இருக்க என்ன செய்யலாம்?
பஜ்ஜி மாவுடன் பூண்டு, இஞ்சி இரண்டையும் சிறிது அரைத்து சேர்த்து கலந்து பஜ்ஜி செய்ய ருசியும் மணமும் கூடும்.
வாழைத்தண்டு, கத்திரிக்காய் போன்றவை முதல் நாளே நறுக்கி வைத்தால் கருத்து விடுகிறதே என்ன செய்வது?
காலை அவசரத்தில் காய்களை நறுக்க முடியாது என்பதால் வேலைக்கு செல்பவர்கள் இரவே நறுக்கி வைத்து விடுவார்கள். வாழைத்தண்டு நறுக்கியதும் சிறிது புளித்த மோர் கலந்து வைத்து விட நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
கத்திரிக்காயை நறுக்கியதும் சிறிது தண்ணீர் விட்டு வைக்க கருக்காமல் இருக்கும்.
வாழைக்காயை இரண்டு மூன்று நாட்கள் வெளியில் வைத்தால் பழுத்துவிடுகிறது என்ன செய்வது?
கவலை வேண்டாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் வாழைக்காயை போட்டு வைத்தால் எளிதில் பழுக்காது.
வேலைக்குப் போகும் அவசரத்தில் காலையில் டிபனுக்கு சட்னி அரைக்க நேரமில்லையே. என்ன செய்யலாம்?
சட்னிக்கு வேண்டிய பொருட்களை நன்கு வறுத்து பொடித்து காற்று புகாத டப்பாக்களில் போட்டு வைத்துக்கொண்டால் தேவைப்படும் சமயத்தில் சிறிது நீர் கலந்து, எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கொட்ட உடனடி சட்னி தயார்.
சமையலுக்கு பெருங்காய தூள் அல்லது பெருங்காய கட்டி எது சிறந்தது?
பெருங்காயத் தூளைவிட கட்டிப் பெருங்காயம்தான் வாசனை மிக்கது. இதனை வைத்திருக்கும் டப்பாவில் 2 பச்சை மிளகாய் போட்டு வைக்க இளகிவிடும். பிறகு சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்தெடுத்து அரிசி மாவில் பிரட்டி (ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இருக்க) ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் தினமும் கை வலிக்க கிள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
ஊறுகாய் தீர்ந்து அதன் மண்டிகள் மீந்துவிட்டால் தூக்கிப்போட மனம் வருவதில்லையே! என்ன செய்யலாம்?
ஊறுகாய் தீர்ந்ததும் மீதம் இருக்கும் மண்டியில் பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகள் அல்லது கேரட் துண்டுகளை போட்டு ஊறவிட தயிர் சாதத்திற்கு ருசியான ஊறுகாய் தயார்.
காலை அவசரத்துக்கு எளிதில் செய்யக்கூடிய டிபன் ஏதேனும் ஒன்றைக்கூற முடியுமா?
ரவையை மிக்ஸியில் பொடித்து அத்துடன் மீந்த பழைய சாதத்தை ஒரு கப் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சிறிது சீரகம் சேர்த்து தோசையாக வார்க்க மொறு மொறப்பாகவும், ருசியாகவும் இருக்கும்.
காலை நேர அவசரத்தில் குழந்தைகள் கட்லட் செய்து கொடு என்று அடம் பிடிக்கும்போது என்ன செய்வது?
ரொம்ப சுலபம். சாதத்தை மசித்து அத்துடன் காலையில் செய்த பொரியல் 1/2 கப் கலந்து கரம் மசாலா, உப்பு, பொடியாக நறுக்கப்பட்ட கொத்தமல்லி சேர்த்து பிசைந்து விருப்பமான வடிவில் கட்லட் செய்து தோசை கல்லில் போட்டு இருபுறமும் சிவந்தெடுக்க நிமிடத்தில் தயாராகிவிடும். விருப்பப்பட்டால் எண்ணெயிலும் பொரித்து தக்காளி சாஸுடன் தரலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.