முருங்கைக்கீரை இயற்கையின் வரமாக பார்க்கப்படும் ஒரு பச்சை இலை காய்கறி. இதில் இரும்புச்சத்து மிகுதியாக இருப்பதால் ரத்தசோகை பிரச்சனையை போக்கி உடலுக்கு நல்ல ஆற்றலை அளிக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து அவசியம். இந்த இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக் கீரையை வைத்து சுவையான சப்பாத்தி எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - 200 கிராம்
கோதுமை மாவு - 2 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் முருங்கைக் கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு நறுக்கிய முருங்கைக்கீரை வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
இப்போது இந்தக் கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக செய்யவும். பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, அரை மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள்.
பின்னர் சப்பாத்தியாக தேய்த்து தவா அல்லது கடாயை சூடாக்கி சப்பாத்தியை இருபுறமும் நன்கு வேக வைத்து எடுத்தால், சூப்பரான சுவையில் முருங்கைக்கீரை சப்பாத்தி தயார். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே செய்து கொடுக்கலாம்.
முருங்கைக் கீரையின் அளவை உங்கள் விருப்பப்படி கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். சப்பாத்தி சுவையாக இருக்க அதில் இஞ்சி பூண்டு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இந்த சப்பாத்தியை சட்னி, சாம்பார், தயிர் போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
இந்த சப்பாத்தி சுவையாக இருப்பதுடன், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், ரத்தசோகை பிரச்சனை உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் இந்த சப்பாத்தியை தவறாமல் சாப்பிடலாம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உங்கள் உணவில் முருங்கைக் கீரையை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். எனவே, இந்த சப்பாத்தி ரெசிபியை இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.