சப்பாத்தி இந்தியாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். பலரின் அன்றாட உணவில் இது முக்கிய இடத்தை வகிக்கிறது. பொதுவாகவே கோதுமை மாவு பயன்படுத்தி செய்யப்படும் இந்த ரொட்டி, சிலருக்கு செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, இதற்கு மாற்றாக புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்த Quinoa, கோதுமைக்கு ஒரு சிறந்த மாற்றாகும். இந்தப் பதிவில், குயினோவா மாவு பயன்படுத்தி சுவையான சப்பாத்தி எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1 கப் Quinoa மாவு
1/2 தேக்கரண்டி உப்பு
1/4 கப் வெதுவெதுப்பான நீர்
1 தேக்கரண்டி எண்ணெய்.
செய்முறை:
முதலில் ஒரு கப் குய்னோவா மாவை கிண்ணத்தில் சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்ததாக பிசைந்து வைத்த மாவில் ஒரு ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் சேர்த்து, மீண்டும் பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் அந்த மாவை சுமார் அரை மணி நேரம் அப்படியே ஊற வைத்த பிறகு, சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
இப்போது பிடித்து வைத்த உருண்டைகளை மெல்லிய சப்பாத்திகளாக தட்டி, ஒரு தவாவில் லேசாக எண்ணெய் தடவி சூடானதும் சப்பாத்திகளை இருபுறமும் பொன்னிறமாக சுட்டு வைத்து எடுத்தால், சூப்பரான சுவையில் ஆரோக்கியமான குயினோவா சப்பாத்தி தயார்.
வெறும் குயினோவா மாவை மட்டும் பயன்படுத்தி சப்பாத்தி சுட்டால் கடினமாக இருக்கும். இது மென்மையாக வருவதற்கு 1/4 கப் அளவுக்கு மைதா அல்லது கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால், வெறும் குயினோவா மாவு பயன்படுத்தி தயாரிக்கப்படும் சப்பாத்திகள் உடலுக்கு ஆரோக்கியமானவை.
இந்த சப்பாத்தி, செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு ஏற்றது. இதில் நிறைந்து காணப்படும் புரதம் மற்றும் நார்ச்சத்து உடல் எடையைக் குறைக்க உதவும். சைவ உணவு உண்பவர்களின் புரதத் தேவையை குயினோவா சப்பாத்தி பூர்த்தி செய்யும். எனவே, இந்த சப்பாத்தி ரெசிபியை இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.