
இந்தக் காலத்துப் பெண்களுக்கு சமைப்பது என்பது ஒரு பெருஞ்சுமையான வேலையாகத் தெரிகிறது. உணவுக்கு சுவை கூட்ட தட்கா என்றொரு செயல்முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
தட்கா என்றால் தமிழில் 'தாளிப்பு' என்று பொருள். நம் சாப்பாட்டுடன் சேர்த்து உண்ணும் பல உணவுகளிலும் தாளிப்பு சேர்ந்திருக்கும். தாளிப்பை எப்படி முறையாக செய்வது என்பதை இப் பதிவில் பார்க்கலாம்.
தாளிப்பில் சேர்க்கப்படும் ஒவ்வொரு மூலப் பொருளுக்கும் ஒரு கொதிநிலை, விடுவிப்பு நேரம் மற்றும் உணவுக்குள் அது உண்டாக்கும் தாக்கம் போன்ற செயல்பாடுகள் உள்ளன. தாளிப்பதற்கு ஊற்றிய நெய் அல்லது எண்ணெய் சரியாக சூடாவதற்கு முன் ஒரு பொருளை சேர்த்தால் அது குக் ஆகாமல் பச்சையாக இருக்கும். உணவில் சுவை அதிகரிக்காது. எண்ணெய் அதிகமாக சூடாகிவிட்டால் அதில் சேர்த்த பொருள் கருகி கடுமையான வாசனை உண்டுபண்ணும்.
தாளிக்க உபயோகிக்கும் ஸ்பைஸஸ்களை வரிசைப்படி சேர்ப்பது அவசியம். சுவையை வெளியிட கூடுதல் நேரம் பிடிக்கும் முழு அளவுள்ள பொருளை முதலிலும், விரைவில் குக்காகி உடனே சுவையை கொடுக்கும் பவுடர் வடிவிலான பொருளை கடைசியிலும் சேர்ப்பது நன்மை தரும்.
தாளிப்பில் பொருட்களை சேர்க்கும் வரிசைப் பட்டியல் இதோ...
முதலில் எண்ணெய். அதை ஸ்மோக் வரும் வரை சூடு பண்ணாமல் ஸ்பைஸஸ் வெடிக்கும் அளவுக்கு சூடாக்கினால் போதுமானது. பிறகு கடுகு. அனைத்து கடுகும் வெடித்த பின் சீரகம். வெடிக்காமல் தங்கிவிடும் கடுகு உணவில் கசப்பு சுவையை சேர்த்துவிடும். சீரகம் பிரவுன் நிறமாக மாறி அதன் மணம் வெளிவரும் வரை காத்திருக்கணும்.
பிறகு வெந்தயம். வெந்தயம் விரைவில் சிவந்து விடுமாகையால் அதற்கு சில வினாடிகள் நேரம் கொடுத்தால் போதுமானது. பிறகு, தாமதிக்காமல் சிறிது பெருங்காயத் தூள் சேர்ப்பது அனைத்து டிஷ்களுக்கும் ஆரோக்கியம் மற்றும் சுவை கூட்டும்.
கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவை அடுத்து சேர்க்க வேண்டிவை. இவற்றில் நீர்ச்சத்து இருப்பதால் எண்ணெயில் சேர்த்ததும் பலமாக வெடிக்கும். கவனம் தேவை. கறிவேப்பிலை ஃபிரஷ்ஷா இருந்தால் கூடுதல் மணம் சேரும். பச்சை மிளகாயை கீறியோ நறுக்கியோ சேர்க்கலாம். அதற்கேற்றவாறு காரம் குறைவாக அல்லது கூடுதலாக உணவில் சேரும்.
பூண்டு பிரவுன் கலராகிவிடாமல் கோல்டன் கலரில் இருப்பது சிறப்பு. வட இந்திய வகை கறி செய்யும்போது, கிரேவி பதம் வருவதற்கு வெங்காயம் சேர்ப்பது அவசியமாகும். மற்ற பவுடர் வகைப்பொருட்களை சேர்க்கும் முன் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கிக் கொள்வது சிறப்பு.
மஞ்சள் தூள், தனியா பொடி, கரம் மசாலா தூள் மற்றும் சிவப்பு மிளகாய்ப் பொடி ஆகியவற்றை சேர்க்கும்போது தீயை குறைத்து விட்டு சேர்ப்பது நல்லது. அல்லது தக்காளி மற்றும் தயிர் போன்ற நீர்ச்சத்துள்ள பொருட்களை சேர்த்துவிட்டு அதனுடன் இந்த பவுடர் வகைகளை சேர்ப்பது அவை கருகிவிடாமல் பாதுகாக்க உதவும். நீங்களும் சமைக்கும்போது மேற்கூறிய தாளிப்பு முறையைப் பின் பற்றுங்க. உணவின் வாசனை தெரு முழுக்க பரவட்டும்.