
சில நேரங்களில் சில பொருட்களை வாங்கி அதை பயன்படுத்தாமல் வைத்துவிடுவோம். பயன்படுத்த எடுக்கும் பொழுது அதில் பாதி அளவு கெட்டுப் போயிருக்கும். மீதி நன்றாக இருக்கும் அதை தூக்கி போடவும் மனது வராது. அவற்றை எப்படி பயன்படுத்தி சமையலை சமாளிக்கலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.
சில நேரங்களில் சேனைக்கிழங்கை வாங்கி நீண்ட நாட்கள் சமைக்காமல் வைத்து விடுவது உண்டு. அதை சமைக்க எடுக்கும் பொழுது அதில் உள்ள நீர் சத்து எல்லாம் குறைந்துபோய் எவ்வளவு நேரம் வேகவிட்டாலும் வேகாது. அதற்கு அந்த சேனைக்கிழங்கை பொடியாக சீவி சிப்ஸ் ஆக பொரித்து எடுத்து அதனுடன் வேர்க்கடலை போன்றவற்றையும் பொறித்து சேர்த்து சாப்பிடலாம் நல்ல ருசியாக இருக்கும் செய்வதும் எளிது. கிழங்கும் வீணாகாது.
திரிந்த பாலை வீணாக்காமல் அதன் கட்டியான பகுதிகளை எடுத்து அதனுடன் வெல்லம், ஏலக்காய் சேர்த்துக் கிளறி கடும்பாக உபயோகப்படுத்தலாம்.
அதிரச மாவு சரியாக கிளறவில்லை என்றால் அதில் அதிரசம் செய்து எண்ணெயில் போட்டதும் பிரிந்து போகும். சேர்ந்து வராது. அந்த மாவை நன்றாக போதுமான அளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்து அப்பம், பணியாரமாக வார்க்கலாம். மிகவும் ருசியாக இருக்கும். மாவும் வீணாகாது.
கோதுமை மாவுடன் அரிசி மாவையும் சேர்த்து சிறிதளவு உளுந்துமாவையும் கலந்து புளிக்க வைத்து தோசை வார்த்தால் தோசை கல்லில் ஈஷிக் கொள்ளாமல் எடுக்கலாம். மிருதுவாகவும் இருக்கும்.
புடலங்காய் மற்றும் பரங்கிக்காய் இரண்டும் குறைந்த அளவே இருந்தால் இரண்டையும் ஒன்றாக சேர்த்து கூட்டோ ,பொரியலோ செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும். கொஞ்சமாக இருப்பதை வைத்து எப்படி சமைப்பது என்று யோசிக்க வேண்டியதில்லை. இரண்டையும் சேர்த்து சமைத்து அசுத்தலாம்.
ரசவண்டலை நன்றாக அரைத்து மைதாவில் கலந்து சிறிது சர்க்கரையும் சேர்த்து பிசைந்து சின்ன சின்ன கார கலகலாவாக செய்து போடலாம். வித்தியாசமான ருசியில் அசத்தம். வண்டலும் வேஸ்ட்டாகாது.
சில நேரங்களில் வீட்டில் வாங்கும் பழவகைகள் ஒவ்வொன்றாக மீந்துவிடும். அதை வெட்டிப் பார்த்தால் சில பகுதிகள் வீணாகி இருக்கும் .அவற்றை நீக்கிவிட்டு நல்ல பகுதிகளை ஒன்றாக சேர்த்து சிறிது தேன் கலந்து ஃப்ரூட் சாலட்டாக சாப்பிடலாம்.
ஏதாவது சுண்டல் வகைகளை அவித்து மீந்துவிட்டால், அவற்றுடன் வெள்ளரிக்காய், கேரட், வெங்காயம் சேர்த்து சலாடாக செய்து சாப்பிடலாம். நல்ல சத்து கிடைக்கும். நீண்ட நேரம் பசி தாங்கும்.
சில நேரங்களில் வாங்கும் கருணைக்கிழங்கு அரிப்பு உள்ளதாக இருக்கும். அவற்றை போக்க கொய்யா இலைகளை பறித்துப் போட்டு, அரிசி கழுவிய தண்ணீரில் வேகவைத்து உரித்தால் அரிப்பு நீங்கி விடும். பிறகு தேவையான பொருட்களை சேர்த்து கூட்டு, குழம்,பு மசியல் என்று செய்து அசத்தலாம். அரிப்பு இருக்காது.
சில நேரம் கடையில் வாங்கும் தேங்காய் கொப்பரையாக இருக்கும். அவற்றை சின்ன சின்னதாக சீவி வைத்துக்கொண்டால் மிக்சர் போன்றவற்றிற்கு வறுத்துபோட வசதியாக இருக்கும். கறி செய்வதற்கான குடை மிளகாய் மற்றும் கத்திரிக்காய் வகைகளில் சாலன் செய்யும் பொழுது கொப்பரை தேங்காயை அரைத்து சேர்க்கலாம் ருசியாக இருக்கும்.
காரக்குழம்பு மீந்துவிட்டால் அதில் கைப்பிடி முருங்கை கீரை பறித்து போட்டு தீயிலாக செய்யலாம். நல்ல ருசியாக இருக்கும். ரசம் தயிர்சாதங்களுக்கு தொட்டுக்கொள்ளலாம்.