
உளுந்து வடை செய்யும்போது வடைக்கு உளுந்தை அரைத்தவுடன் உபயோகித்தால் எண்ணெய் குடிக்காது. நேரம் ஆக, ஆக அதிக எண்ணெய் குடிக்கும்.
மிக்ஸி ஜார் பிளேடில் இருக்கும் மசாலா வாசனையை அகற்ற, கொஞ்சம் பிரட்டை போட்டு அரைத்தால் போதும். பிளேடில் இருக்கும் மசாலா வாசனை போய்விடும்.
உணவுப் பொருட்களை வேகவைப்பதைத் தவிர, குக்கர் பாத்திரத்தை வேறு எதற்கும் பயன் படுத்தக்கூடாது.
அலுமினியப் பாத்திரத்தின் உட்பகுதியில் கறுப்பு நிறமாக இருந்தால் ஒரு தக்காளியை வெட்டிப்போட்டு வேகவையுங்கள். கறுப்பு நிறம் மாறிவிடும்.
சமையலறையை சுத்தமாக்கும் எண்ணெய் பிசுக்கேறிய துணிகளை கடலைமாவு கலந்த தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைத்து, பிறகு துவைத்தால் எண்ணெய் பிசுக்கு அகன்றுவிடும்.
ரசத்தில் கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்ப்பதற்கு பதில், கொஞ்சம் முருங்கைக்கீரையை நெய்யில் பொரித்துச் சேர்த்தால் ரசம் மிகவும் சுவையாக இருக்கும்.
மண்பாண்டங்களில் பாலை வைத்தாலும், உறை ஊற்றி வைத்தாலும் சீக்கிரம் கெடாது.
எண்ணையில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை அடுப்பிலிருந்து எடுத்தவுடன் மூடக்கூடாது. அவ்வாறு செய்தால் உணவுப்பண்டங்கள் நமர்த்துவிடும்.
வீட்டிலேயே கார்லிக் பிரட் செய்ய வேண்டுமா? அரை ஸ்பூன் பூண்டு பேஸ்ட் எடுத்து, அதில் இரண்டு ஸ்பூன் வெண்ணைய் சேர்த்துக் குழையுங்கள். இதை பிரட் துண்டுகளின் மேல் லேசாகத் தடவி, டோஸ்டரில் டோஸ்ட் செய்தால் கார்லிக் பிரட் ரெடி.
வாழைப்பூவை நறுக்கும் முன்பு ஒரு சிறிய தட்டில் பொடி உப்பை வைத்துக்கொள்ளுங்கள். அடிக்கடி உப்பைத் தொட்டு உள்ளங்கையில் பரவலாகத் தேய்த்துக் கொண்டிருந்தால், எவ்வளவு நறுக்கினாலும் கைகள் கறுத்துப் போகாது.
எவர்சில்வர் கத்தியை பயன்படுத்தி பழங்களை நறுக்கினால் பழங்களின் நிறம் மாறாது.
மஞ்சள் பொடியையும், கற்பூரப்பொடியையும் கலந்து கிச்சன் சிங்கை சுற்றி இரவில் தெளித்தால் கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை அண்டாது.