
பலாமுசு இடிச்ச கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த பிஞ்சு பலா துண்டுகள்- ஒரு கப் தேங்காய் துருவல் -அரை கப் பச்சை மிளகாய்- இரண்டு
தாளிக்க தேவை: தேங்காய் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு ,காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, மஞ்சள் ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு
செய்முறை:
சுத்தம் செய்த பலாமுசுவை குக்கரில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு இரண்டு விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அவற்றை குழையவிடாமல் மசிக்கும் கரண்டியால் லேசாக குத்தி உதிர் உதிர் ஆக்கிவைக்கவும்.
தேங்காயுடன் பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர்விடாமல் அரைத்து வைக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் விட்டு, காய்ந்ததும் அதில் கடுகு தாளிக்கவும். பின்னர் தாளிக்க கொடுத்தவற்றை அதில் போட்டு இரண்டு பட்டை மிளகாய் கிள்ளி போட்டு சிவக்க வறுத்து, மஞ்சள் பொடியையும் சேர்த்து வெந்த பலா பிஞ்சை இதில் கொட்டவும். நன்றாக புரட்டி விட்டு, அரைத்து வைத்த தேங்காய் பேஸ்ட்டை இதில் சேர்த்து சிம்மில் வைத்து உப்பு சேர்த்து நன்றாகக்கிளறி இறக்கி சாதத்துடன் சேர்த்து பரிமாறவும். பலாமுசு இடிச்ச கூட்டு தயார்.
பலாக்காய் பச்சை பட்டாணி வறுவல்:
செய்ய தேவையான பொருட்கள்:
சிறு துண்டுகளாக நறுக்கிய பிஞ்சு பலாக்காய்- ஒரு கப்
பச்சை பட்டாணி- ஒரு கப்
தேங்காய்த் துருவல்- ஒரு கப்
வெங்காயம் பொடியாக நறுக்கியது- ஒரு கப்
சோம்பு, கசகசா தலா- அரை டீஸ்பூன்
மிளகு -அரை டீஸ்பூன
சாம்பார் பொடி- ஒரு டேபிள் ஸ்பூன்
பிரிஞ்சி இலை -ஒன்று
கிராம்பு- 2
லவங்கப்பட்டை -சிறிது
மல்லித்தழை- சிறிதளவு
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
தேங்காய் துருவல், சோம்பு, கசகசா மூன்றையும் வறுத்து அரைத்து வைத்துவிடவும்.
பலாமுசு, பச்சை பட்டாணி இரண்டையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, கிராம்பு, சோம்பு, பட்டை சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் சாம்பார் எப்படி சேர்த்து கிளறிவிட்டு, உப்பு போட்டு வெந்த பலாக்காய் மற்றும் பச்சை பட்டாணியை சேர்க்கவும்.
சிறிது நேரம் அப்படியே சிம்மில் வைத்து வேகவிட்டு, அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக மூடி சிம்மில் வைக்கவும். எல்லாமாக சேர்ந்து நன்றாக வெந்து மணம் வரும்பொழுது மசாலா இவைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும்படி இருக்க வேண்டும் .அதிகமாக தண்ணீரில் மிதக்க கூடாது.
அப்பொழுது மல்லி தழையைத்தூவி நன்றாக புரட்டிவிட்டு சாம்பார், ரசம் சாதத்துடன் சாப்பிடலாம். வித்தியாசமான ருசியில் எல்லோரும் விரும்பி சாப்பிட ஏற்ற வறுவல் இது. இதனுடன் ஒரு கப் வடித்த பாஸ்மதி ரைஸை சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். பலாக்காய் சீசனில் செய்து அசத்துங்கள்.