ஜூலை 7: உலகச் சாக்கலேட் நாள்! வெள்ளைச் சாக்கலேட் முதல் கரும் சாக்கலேட் வரை... அப்பப்பா இதனை வகைகளா!

World Chocolate Day
World Chocolate Day

உலகம் முழுவதும் ஜூலை 7 ஆம் நாள் உலகச் சாக்கலேட் நாளாகக் ((World Chocolate Day) கடைப்பிடிக்கப்படுகிறது. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சாக்கலேட்களின் வகைகள் பற்றி தெரிந்துகொள்வோமே!

இனிப்பூட்டப்படாத சாக்கலேட்: 

இது தூய வெளிப்பொருள் கலக்காத சாக்கலேட் கூழ் ஆகும். கொக்கோக் கொட்டைகளை அரைத்துத் தயாரிக்கப்படும் இக்கூழ், கசப்பு அல்லது பேக்கிங் சாக்கலேட் என்றும் அழைக்கப்படுகிறது. ஆழமான சாக்கலேட் சுவை மணம் கொண்ட இக்கூழ், சர்க்கரை சேர்த்து அமெரிக்க வகை அடுக்குக் கேக்குகள், பிரௌனிக்களுக்கு அடிப்படைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

கரும் சாக்கலேட்: 

பால் கலக்கப்படாத இவ்வகை சாக்கலேட், கலப்பில்லா சாக்கலேட் என்றும் அழைக்கப்படுகிறது. அமெரிக்க அரசாங்கம் இவ்வகை சாக்கலேட்டில் 15 % சாக்கலேட் கூழ் இருக்க வேண்டுமென்ற கட்டுப்பாட்டுடன் இதனை இனிப்பு சாக்கலேட் என்று அழைக்கிறது. ஐரோப்பிய விதிகள் இவ்வகை சாக்கலேட்டில் குறைந்தது 35 % சாக்கலேட் திடப்பொருட்கள் இருக்க வேண்டுமென வேண்டுகின்றன.

கூவெர்சர்: 

இவை அதிக கொக்கோ வெண்ணெயுடைய உயர்தரச் சாக்கலேட்டுகள் ஆகும். இவ்வகை சாக்கலேட்டுகள் மிக அதிக வீதத்தில் கொக்கோ கூழ் மற்றும் கொக்கோ வெண்ணெய் கொண்டனவாயும், உருக்கும் போது நல்ல திரவ நிலையடைவனவாயும் இருக்கும். பொதுவாக, இவை மிக உயர்தரச் சாக்கலேட் சுவை மணம் கொண்டவையாகக் கருதப்படுகின்றன. இத்தரமிகு சாக்கலேட்டுகளில் கசப்பு முதல் இனிப்பு வரை பல்வேறு வகைகள் இருப்பினும் மிகச்சிறு சுவை மண வேறுபாடுகளைத் தெளிவாக இனங்காண முடிவதால், இவை இதேப் பண்புகளுள்ள உயர்தர ஒயின்களுடன் ஒப்பிடப்படுகின்றன. தொழில்முறை சமையலாளர்களால் இனிப்புப் பண்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன. 

பால் சாக்கலேட்: 

இவ்வகை சாக்கலேட்டுகள் பெயருக்கேற்பப் பால் தூள் அல்லது தடித்த பால் கலந்து தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்க அரசாங்கம் இவற்றில் 10 % சாக்கொலேட் கூழ் இருக்க வேண்டுமென்றும், ஐரோப்பிய விதிகள் குறைந்தது 25% கொக்கோ திடப்பொருட்கள் இருக்க வேண்டுமெனவும் விதிக்கின்றன.

மிதமாக இனிப்பூட்டப்பட்ட சாக்கலேட்: 

இவ்வகை சாக்கலேட்டுகள் அன்றாடச் சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. இவை, பொதுவாக அதிகச் சர்க்கரை கொண்ட கரும் சாக்கலேட்டுகளேயாகும். ஆனால், இவற்றில் கரும் சாக்கலேட்டை விடக் குறைந்த அளவு கொக்கோவே இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
மில்க் சாக்லேட், ரெகுலர் சாக்லேட்டை விட 'டார்க் சாக்லேட்' நல்லதா?
World Chocolate Day

கசப்பு - இனிப்புச் சாக்கலேட்:

இது சாக்கொலேட் கூழுடன் சர்க்கரை, கொக்கோ வெண்ணெய், லெசித்தின் மற்றும் வனிலா கலந்து தயாரிக்கப்படுகிறது. இவை மித இனிப்பு வகை சாக்கலேட்டுகளை விடக் குறைவான சர்க்கரையும், அதிகமான சாக்கலேட் கூழும் உடையவை. சுவைக்கேற்ப இவ்விரு வகைகளில் ஒன்றைச் சமையலில் பயன்படுத்தலாம். உயரிய தரமுள்ள கசப்பினிப்பு சாக்கலேட்டுகள் கூவெர்சர் வகையாகத் தயார் செய்யப்பட்டு, அவற்றின் சாக்கலேட் கூழ் வீதம் பயனீட்டாளர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. எவ்வளவு சாக்கலேட் கூழ் உள்ளதோ அவ்வளவு கசப்பினிப்புடன் இவற்றின் சுவை இருக்கும்.

வெள்ளைச் சாக்கலேட்: 

இவை கொக்கோ திடப்பொருட்கள் இல்லாமல் கொக்கோ வெண்ணெய் மட்டுமேக் கொண்டு உருவாக்கப்படும் இனிப்புப் பண்டங்களாகும்.

கொக்கோ தூள் :

இரு வகை சுவையூட்டப்படாத பேக்கிங் கொக்கோ தூள்கள் உள்ளன: இயற்கையான கொக்கோ மற்றும் டச்சு முறை கொக்கோ.

இவை இரண்டுமே மிதமாக கொழுப்பு நீக்கிய சாக்கலேட் கூழைப் பொடித்து கொக்கோ வெண்ணெய் நீக்கப்பட்டுத் தயாராகின்றன. இயற்கையான கொக்கோ வெளிர் நிறமும், சற்றே அமிலத்தன்மையும், மிக அதிக சாக்கலேட் சுவை மணம் கொண்டதாயும் இருக்கும். பேக்கிங்கின் போது இவ்வகை கொக்கோவுடன் சமையல் சோடா சேர்க்கப்பட வேண்டும். கொக்கோவின் அமிலத்தன்மையும், சோடாவின் காரத்தன்மையும் கலப்பது மாவுக்கலவையை வாயு நிறைத்து மிருதுவாக்கும். டச்சு முறை கொக்கோ தயாரிக்கப்படும் போதே, காரம் சேர்க்கப்பட்டு அதன் அமிலத்தன்மை சமனாக்கப்படுகிறது. இவ்வகை கொக்கோ சற்றேக் குறைந்த சுவை மணமும், ஆழமான நிறமும் கொண்டிருக்கும்.

புதினா, ஆரஞ்சு அல்லது ஸ்ட்ராபெர்ரி போன்ற சுவை மணங்கள் சாக்கலேட்டுடன் கலக்கப்படுவதுண்டு. நாம் பொதுவாக சாக்கலேட் என்று சாப்பிடும் இனிப்பு பண்டம் சாக்கலேட்டுடன் கடலை, அரிசிப் பொரி, கொட்டைகள் போன்ற மற்ற இடுபொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சாராய வகை பானங்கள் கலந்தும் சாக்கலேட்கள் தயாரிக்கப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com