இந்த 'கிரேவி பேஸ்' கைவசம் இருந்தால் போதும்! - இனி எல்லாமே ஈஸி!

கிரேவி பேஸ்...
கிரேவி பேஸ்...

ந்த அவசர உலகில்  நேரமின்மை போன்ற காரணங்களால் நமக்குப் பிடித்த உணவைச் செய்து சாப்பிடக்கூட இயலாமல் - அவசர அவசரமாக - ஏனோதானோ என்று சமையல் செய்யும் பலர் நம்மிடையே உண்டு.

உங்களுக்குப் பிடித்த உணவை, இனி சட்டென்று சில நிமிடங்களில் செய்து அசத்தலாம் -  இந்த 'கிரேவி பேஸ்' உங்கள் கைவசம் இருந்தால் போதும்!  உங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுது இந்த பேஸ் கிரேவியை  செய்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் பத்து நாட்கள் வரை கூட கெடாமல் இருக்கும்.

கிரேவி பேஸ் (Gravy base) என்பது வெங்காயம் மற்றும் தக்காளியை பயன்படுத்தி விதவிதமான கிரேவி செய்வதற்கு அடிப்படையாகச் செய்யும் மசாலா குழைவு.

* தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 200 மிலி, வெங்காயம் –  1  கிலோ, தக்காளி – 1  கிலோ, இஞ்சி – 50 கி, பூண்டு – 50 கி, மஞ்சள் தூள் – 1  தேக்கரண்டி, மிளகாய் தூள் – 4  தேக்கரண்டி, மல்லித்தூள் – 8  தேக்கரண்டி, கரம் மசாலா – 1  தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு.


அரைக்க தேவையான பொருட்கள்:
கிராம்பு – 10, ஏலக்காய் – 10, ஜாதிக்காய் – ½, அன்னாசிப்பூ – 2, கல்பாசி –  சிறிதளவு, பட்டை – 2 பெரிய துண்டு, பிரிஞ்சி இலை – 3, முந்திரி பருப்பு - 15 எண்ணிக்கை.


முன் ஏற்பாடுகள்:
வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டையும்  சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கூழாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் அனைத்தையும் ஒரு கப் தண்ணீரில் கரைத்து தனியே வைக்கவும். (நேரடியாக தூள்களை எண்ணெயில் சேர்க்கையில் அவை கருகி சுவை குறையாமல் தவிர்க்க இது சிறந்த முறையாகும்).

அரைக்கக் கொடுத்துள்ள மசாலாப் பொருட்கள் அத்தனையையும் தனியாக அரைத்து வைக்கவும்.

முந்திரி பருப்புகளை 30 நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

செய்முறை:

ஒரு அடிகனமான வாணலியில் 200மிலி எண்ணெய் சேர்த்து  சூடானதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள  வெங்காயத்தைச் சேர்த்து மிதமான தீயில்  கண்ணாடி பதம் வரும்வரை வதக்கிக்கொள்ளவும்.

வெங்காயம் பொன்னிறத்தைவிட சற்று கருமையாக இருக்கும்போது - அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை  வதக்கிக்கொள்ளவும்.

கரைத்து வைத்துள்ள மஞ்சள், மல்லி, மிளகாய்த்தூள் கரைசலை ஊற்றி, அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

தக்காளி கூழ் சேர்த்து நன்றாக கிளறவும். இந்த கலவையை குறைந்த வெப்பத்தில் பெரும்பாலான நீர் வற்றும் வரை  நீங்கள் தொடர்ந்து கிளறுவதை உறுதி செய்யவும்.

கடைசியாக அரைத்து வைத்துள்ள முந்திரி விழுதைச் சேர்த்து மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்கள் கொதித்த பிறகு அடுப்பை அணைத்து, தயாரான கிரேவியை  முழுமையாக ஆறவிடவும்.

இதையும் படியுங்கள்:
ப்ளூ கார்ன் சோளத்தின் நன்மைகள் தெரியுமா?
கிரேவி பேஸ்...

ஒரு காற்று புகாத கண்ணாடி ஜாடியில் இந்த பேஸ் கிரேவியைச் சேமித்து வைக்கவும்.

இட்லி,  தோசை, பூரி, சப்பாத்தி,  பரோட்டா,  நான் ஆகியவற்றுக்கான சைட் டிஷ், குருமா, பலவகையான கிரேவி செய்வதற்கு அடிப்படையான மசாலா குழைவு இதுதான்!

எந்த வகை சமையல் செய்வதாக இருந்தாலும் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை தாளித்த பின்னர், இந்த பேஸ் கிரேவியைச் சேர்த்து - உங்கள் விருப்பப்படி பனீர், காளான், உருளைக்கிழங்கு, பட்டாணி,  சென்னா மசாலா,  காய்கறி குருமா,  காலிபிளவர் மசாலா போன்ற பலவிதமான கிரேவி வகை உணவுகளை மிக சுலபமான முறையில் அதே சமயத்தில் விரைவாக செய்யலாம்.
l சைவ குருமா வகைகள் தவிர  முட்டை குருமா,  சிக்கன் கிரேவி,  மட்டன் மசாலா போன்ற அசைவ குருமா வகைகள் செய்யவும் தாராளமாக பயன் படுத்திக்கொள்ளலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com