‘ப்ளூ கார்ன்’ என்பது மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் வளர்க்கப்படும் ஒரு வகை சோளம். இது ப்ளூ கார்ன் மீல், டார்ட்டிலா, ட்லாகோயோ போன்ற மெக்சிகன் உணவு வகைகளில் பிரதானமாக சேர்க்கப்படும் மூலப்பொருளாகும். இதிலுள்ள அன்தோசியானின் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் இதற்கு அடர் ப்ளூ மற்றும் பர்பிள் கலரைக் கொடுக்கும் நிறமியைக் கொண்டுள்ளது. இந்தக் கார்னில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
ப்ளூ கார்னில் உள்ள அதிகளவு புரோட்டீன் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், தசைகளின் அடர்த்தியை அதிகரித்து உடலுக்கு வலு சேர்க்கவும் உதவுகிறது. மஞ்சள் நிற சோளத்தில் இருப்பதை விட, முப்பது சதவிகிதம் அதிக புரோட்டீன் இதில் உள்ளது. மேலும், இது குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளதால், சர்க்கரையானது மெதுவாகவே இரத்தத்தில் கலக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் உண்ண ஏற்ற உணவாகவும், அவர்களுக்கு நாள் முழுக்க தேவைப்படும் சக்தியை அளிக்கக் கூடியதாகவும் இது உள்ளது.
ப்ளூ கார்னில் உள்ள அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஃபிரிரேடிகல்களின் அளவை சமநிலைப்படுத்துகின்றன. உடம்பில் ஏற்படும் வீக்கத்தையும் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸையும் குறைக்கின்றன. மூளையின் அறிவாற்றலை மேம்படுத்துகின்றன. ஃபிளவனாய்ட்கள் புற்றுநோய் பரவச் செய்யும் செல்களை அழித்து உடலைக் காக்கின்றன.
இதிலுள்ள நார்ச்சத்தானது இரத்த நாளங்களில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. இதன் மூலம் இரத்த அழுத்தம் சமநிலை செய்யப்படுகிறது. இதனால் இதய நோய்கள் வரும் அபாயமும் பெருமளவு தடுக்கப்படுகிறது. ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியம் காக்கப்பட்டு செரிமானம் நல்ல முறையில் நடைபெற இதிலுள்ள நார்ச்சத்து உதவுகிறது. அது மட்டுமின்றி, மலச்சிக்கலையும் இது தடுக்கிறது. ஊட்டச் சத்துக்கள் நல்ல முறையில் உறிஞ்சப்பட்டு, உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்கப்படுகிறது.
இதிலுள்ள வைட்டமின்கள், காப்பர், துத்தநாகம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் மற்றும் ஃபொலேட் ஆகிய ஊட்டச்சத்துக்கள் கண் ஆரோக்கியம் காக்கப் பயன்படுகின்றன. வயதாவதால் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளை சரிப்படுத்தவும் உதவுகின்றன.