
வீட்டிலேயே பலரும் ஒரே மாதிரியாக பாயாசம் செய்வதை விட அதில் சில பொருட்களை கலந்து செய்யும் பொழுது ருசியும் சத்தும் கூடும். அதேபோல் சில நேரங்களில் ஜவ்வரிசியும், உளுந்தம் குறைவாக இருக்கும் அதை சேர்த்து வடை செய்தால் சுவை அருமையாக இருக்கும் அதனைப் பற்றி இதில் காண்போம்.
கலவை பாயசம்
செய்யத் தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி ஊற வைத்தது- அரை டம்ளர்
வறுத்த சேமியா- அரை டம்ளர்
ஊறிய கடலைப்பருப்பு- கைப்பிடி அளவு
பாசிப்பருப்பு -கைப்பிடி அளவு
தேங்காய்த் துருவல்- கால் கப்
வெல்லத்துருவல்- ஒன்றரை கப்
முந்திரிப் பருப்பு ஒடித்து வறுத்தது- ஒரு டேபிள் ஸ்பூன்
திராட்சை வறுத்தது -ஒரு டேபிள்
ஸ்பூன்
ஏலக்காய் பொடி -2 சிட்டிகை
பால் -2கப்
குங்குமப்பூ -சிறிதளவு
செய்முறை:
நன்றாக ஊறிய ஜவ்வரிசியுடன் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு எடுக்கவும். பிறகு தேவையான தண்ணீர்விட்டு சேமியாவை சேர்த்து வேகவிடவும். முக்கால் திட்டம் வெந்த உடன் தேங்காய் துருவல் மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து முந்திரி, திராட்சை ஏலப்பொடி சேர்த்து இறக்கி குங்குமப் பூவை தூவவும். நன்றாக ஆறியவுடன் பால் சேர்த்து பரிமாற சுவையள்ளும். வித்தியாசமான சத்துக்கள் நிறைந்த கலவை பாயசம் இது. வெல்லம் சேர்த்து இருப்பதால் பாலை பிறகு கலப்பது திரியாமல் இருக்க உதவி செய்யும்.
ஜவ்வரிசி, உளுந்து கலவை வடை
செய்ய தேவையான பொருட்கள்:
அரை டம்ளர் -ஜவ்வரிசியைப் பொடித்து ஊறவிடவும்
அரை டம்ளர் -உளுந்தை ஊற வைத்து அரைத்து எடுக்கவும்.
பத்து -சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்
நான்கு- பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்
கருவேப்பிலை ,தனியா போன்றவற்றை -கைப்பிடி அளவு பொடியாக நறுக்கவும்
கேரட், பீன்ஸ் கைப்பிடி அளவு பொடியாக நறுக்கவும்
உப்பு, எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து மெல்லிய வடைகளாகத் தட்டி, கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். இந்தக் கலவை வடை அசத்தலாக இருக்கும். செய்து பாருங்கள்.