
பதனீர்
பதனீர் என்பது பனை மரத்தின் மொட்டிலிருந்து பெறப்படும் இயற்கை பானமாகும். பதனீரை இயற்கையாகவே அருந்தலாம். அதிக வெப்பமான காலங்களில் பதனீரில் நுங்கு வெட்டிப் போட்டு தினமும் அருந்தலாம். மேலும் எலுமிச்சைசாறு சேர்த்து குடிப்பது கூட சிறந்த பலனைத்தரும். மேலும் இந்த பதனீரை பனை ஓலை பட்டையில் ஊற்றி குடிக்கும்போது அதன் சுவையும், மணமும் தனிதான்
நன்மைகள்: பதனீர் இயற்கையாகவே குளிர்ச்சியானது. எனவே கோடை காலத்தில் குடிப்பதால் உடல் சூடேற்றத்தை தடுக்கும். உடலில் நீர்ச்சத்து குறைவாகும்போது பதனீர் குடிப்பது தாகத்தைத் தணிக்கும். மற்றும் நீர் சீர்ச்சத்தினை நிலைநாட்ட உதவும். இயற்கை இனிப்பு மட்டுமே உள்ளதால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
இளநீருக்கு இணையான பதனீர் சிறந்த நுண்ணுயிர் வளர்ச்சியை ஊக்குவித்து ஜீரணத்தை மேம்படுத்தும். குறைந்த கலோரிகளை கொண்டுள்ளதால் உடல் எடையை குறைக்க உதவும். சோடியம், மாங்கனீசு பொட்டாசியம், போன்ற உடலுக்கு தேவையான தாதுப் பொருட்கள் இதில் உள்ளன.
மருத்துவ குணம்: சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கும். திசுக்களின் சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் காய்ச்சல், டையரியா, போன்ற உடல் நல குறைவுகளுக்கும் இயற்கை மருந்தாக செயல்படுகிறது.
கரும்பு
கரும்பு சாற்றை பிழிந்து எடுத்த உடனே குடிப்பது சிறந்தது. ஏனெனில் சேமித்து வைத்தால் கெட்டு போகும் வாய்ப்பு உள்ளது. வெப்ப காலங்களில் பக்க விளைவுகள் இல்லாமல் உடலை குளிர்விக்க கரும்பு சாறு சிறந்தது. கரும்பு சாற்றுடன் இஞ்சி, புதினா, எலுமிச்சை சேர்த்து குடிப்பது மேலும் ஆரோக்கியத்தை வழங்கும்.
நன்மைகள்: கரும்பு ஜூஸில் அதிகமான நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளதால் அது உடலை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது. இதில் உள்ள இயற்கை சர்க்கரை உடனே எரிசக்தியாக மாற்றப் படுவதால் உடல் சோர்வும், களைப்பும் குறைகிறது. இதில் உள்ள பைபர் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் சிறந்த தூய்மை பானமாக செயல்பட்டு செரிமானத்தை ஊக்கு விக்கின்றன.
இதில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுப்பதுடன், மூலநோயை குறைக்கும் சக்திகொண்டது. சிறுநீரகக் கற்களைத் தடுக்க உதவுகிறது. கரும்பு ஜூஸ் பக்க விளைவின்றி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகள் அளவோடு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மண்பானை மோர்
விடியற்காலையில் மோர் கடைந்து அதில் இஞ்சி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், மல்லிக்கீரை, உப்பு சேர்த்து சதைத்து மோருடன் கலந்து மண்பானையில் ஊற்றி வைத்து அடிக்கடி குடித்தால் சுவையான தாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
நன்மைகள்: மண்பானை மோர் இயற்கையாகவே குளிர்ச்சியாக இருப்பதால் உடலில் சூடு குறைந்து குளிர்ச்சியை வழங்குகிறது. மண்பானை உலர் வெப்பத்தை உறிஞ்சுவதால்,அந்த மோர் பசி, மற்றும் தாகத்தை தணிக்க உதவுகிறது. மோரில் இருக்கும் பாக்டீரியாக்கள் நல்ல செரிமான சக்தியை வழங்குகின்றன. மண்பானை மூலம் இயற்கையான கனிமங்கள் மோரில் கலந்து உடலுக்கு கூடுதல் நன்மை தருகிறது. மண்பானை மோர் நீரிழிவு, சிறுநீரக கற்கள் போன்ற பிரச்னைகளை தவிர்க்க உதவும்.
சூடான காலங்களில் மண்பானை மோர் குடிப்பதன் மூலம் வியர்வை அதிகமாக பறிமாற்றம் செய்யாமல் கட்டுப்படுத்த முடியும். மண்பானை இயற்கையாகவே (detoxifying) பணியை செய்வதால். மோருடன் சேர்ந்து உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றப்படும். மேலும் கல்லீரல் செயல்பாடு மேம்படும். இது உடலில் தேங்கும் வெப்பத்தை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.